இருளைப் போக்கும் விளக்கு இருளைப் போக்கும் விளக்கு 

தடம் தந்த தகைமை - வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை

விளக்கு மனிதரை வழிநடத்துவது, இருள் அழிப்பது, தன்னை இழப்பது, இருப்பதைக் காட்டுவது. இப்பணிகளையெல்லாம் புரியும் விளக்கைப் போல ஒளிர்வதே நடமாடும் விளக்குகளாம் நம் பணி.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. (லூக் 8:16&17)

‘விளக்கு’ எனும் சொல் பல அர்த்தங்களைக் கொண்டது. எண்ணெய், திரி, தீ என மூன்றும் தீய்ந்து ஒளி உமிழ்வது, புரியாததைப் புரிய வைப்பது, அழுக்கானதைக் கழுவிப் ‘பளிச்’ என ஆக்குவது என சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கண்ட எல்லாவற்றிற்கும் விளக்கு என்ற சொல்லையே பயன்படுத்துகின்றோம். விளக்கு மனிதரை வழிநடத்துவது, இருள் அழிப்பது, தன்னை இழப்பது, இருப்பதைக் காட்டுவது. இப்பணிகளையெல்லாம் புரியும் விளக்கைப் போல ஒளிர்வதே நடமாடும் விளக்குகளாம் நம் பணி.

ஏற்றப்படும் விளக்கினால்தான் இவை எல்லாம் நிகழும். விளக்கு ஏற்றப்படாமலோ ஏற்றப்பட்ட விளக்கு கட்டிலின் கீழோ வைப்பதனால் எப்பயனும் இல்லை. மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் நற்செயல்களால் ஒளிர வேண்டும். அது விளம்பரமாக அன்றி பின்தொடர்தலுக்கான மாதிரியாக அமைய வேண்டும். விளக்காய் ஒளிரும் நாம் ஒவ்வொருவரும் ஏனையோரை இருளின் பாதையில் அல்லாமல் ஒளியின் வழியில் வழிநடத்த வேண்டியது நம் பிறப்பின் பொறுப்பாகும். நற்செயல்களால் ஒளிர்வதே பிறவிப் பயன்.

இறைவா! வாழ்வின் கடைசி மூச்சுவரை நான் ஏற்றப்பட்ட விளக்காக ஒளிர நீரே என் எண்ணெயாய் இரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஜூலை 2025, 12:21