இயேசுவுடன் உரையாடல் இயேசுவுடன் உரையாடல் 

தடம் தந்த தகைமை - உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு.....

இயேசுவின் பணி ஒவ்வொன்றும் சவால்கள் சூழ்ந்தது. எல்லாவற்றையும் எதிர்ப்பு உணர்வோடும் குதர்க்க மனதோடும் அணுகிய மறைநூல் அறிஞர்களைப் பார்த்து இயேசு புறமுதுகு காட்டவில்லை. அஞ்சா நெஞ்சோடு அருஞ்செயல் புரிந்திடத் துணிந்தார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ. (மாற் 2:11) என முடக்குவாதமுற்றவரிடம் கூறினார் இயேசு.

இயேசுவின் பணி ஒவ்வொன்றும் சவால்கள் சூழ்ந்தது. எல்லாவற்றையும் எதிர்ப்பு உணர்வோடும் குதர்க்க மனதோடும் அணுகிய மறைநூல் அறிஞர்களைப் பார்த்து இயேசு புறமுதுகு காட்டவில்லை. அஞ்சா நெஞ்சோடு அருஞ்செயல் புரிந்திடத் துணிந்தார்.   முடக்குவாதமுற்றவரின் முழு நம்பிக்கை, சுமந்து வந்த நால்வரின் நல்லெண்ணம், வீட்டுக் கூரையை உடைத்துக் கொடுத்த வீட்டுஉரிமையாளரின் தியாகம் என்பனவெல்லாம் குறுகிய அறிவு கொண்ட மறைநூல் அறிஞர்களைவிட மகத்துவமிக்கதாக இயேசுவுக்குத் தோன்றிற்று. அதுவே இவ்வருஞ்செயலின் திறவுகோல்.

கடவுளுக்கு மட்டும்தான் மன்னிக்கும் உரிமை உண்டென்ற கற்பனையில் திளைத்தவர்களுக்கு இயேசுவின் மன்னிக்கும் சொல்லும், எழுந்து நடக்கச் செய்த செயலும் சம்மட்டி அடியானது. அடிமட்ட ஏழையர்க்கும், அநீதி இழைக்கப்பட்டவர்க்கும் நீதி நிலைப்பாடுடன் ஏதேனும் செய்தால் ஏனையோர் ஊறுவிளைவிப்பார்களோ என்றெண்ணி ஏதும் செய்யாமலிருப்பது தவறு மட்டுமல்ல, அது பெரும் பாவம். நாம் திருமுழுக்குப் பெற்றிருப்பது அன்பிலும் நீதியிலும் நிலைத்து சாட்சியாகவே. அவ்வாறு வாழவில்லையெனில் அது வெறும்முழுக்கு. நீதிப்பணிக்கும் நேர்மையான வாழ்விற்கும் அடிப்படைத் தேவை மனத்துணிவு.

இறைவா! உம் பெயர் அன்பு மட்டுமல்ல, நீதியும் கூட. உம்மை அன்பு செய்வதோடு நீதியோடு வாழவும் வழிகாட்டும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஜூலை 2025, 12:40