திருப்பலி நிறைவேற்றும் ஆயர் கபிரியேல் கியாகோமோ துனியா திருப்பலி நிறைவேற்றும் ஆயர் கபிரியேல் கியாகோமோ துனியா  

நைஜீரியாவில் குருமாணவர்களை விடுவிக்கும் முயற்சி!

பாதுகாப்புப் படையினரும் மாநில அரசும் கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்து வரும் அதேவேளை, மற்ற குருமாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, தங்களின் இறுதித் தேர்வுகளைத் தொடர்கின்றனர் : பீதேஸ் செய்தி நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்

சில நாள்களுக்கு முன்பு நைஜீரியாவின் எடோ மாநிலத்தில் உள்ள இவ்ஹியானோக்போடியில் உள்ள அமல உற்பவ அன்னை இளங்குருமடத்தின்மீது நிகழ்ந்த ஆயுதமேந்திய தாக்குதலின் போது மூன்று குருமாணவர்கள் கடத்தப்பட்ட நிலையில், தற்போது கடத்தல்காரர்கள் அம்மறைமாவட்டத்துடன் தொடர்புகொண்டு பேசியுள்ளதாக பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் கூறிய ஆயர் கபிரியேல் கியாகோமோ துனியா அவர்கள், கடத்தல்காரர்கள் அவுச்சி மறைமாவட்டத்தைத் தொடர்பு கொண்டு கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கான தொகை குறித்து பேசினர், ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றும், குருமாணவர்கள் இன்னும் அவர்களின் பிடியில்தான் இருக்கின்றனர் என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

அதேவேளையில், பாதுகாப்புப் படையினரும் மாநில அரசும் கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றன என்றும், மற்ற குருமாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, தங்களின் இறுதித் தேர்வுகளைத் தொடர்கின்றனர் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

மேலும் இந்தக் குருமடத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இது என்றும், கடந்த  2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அதன் அதிபர் தந்தை  தாமஸ் ஓயோட் அவர்கள் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூலை 2025, 12:44