கென்ய திருஅவை வழிபாடு கென்ய திருஅவை வழிபாடு  (ANSA)

நாட்டைக் கட்டியெழுப்புவதில் இளையோரின் பங்களிப்பு

அதிகாரத்தில் இருப்போர் அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் பங்களிப்பை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சியான மனநிலையுடன் செயல்படவேண்டும். சமூக பொருளாதார வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்பு, வலுவான நாட்டைக் கட்டியெழுப்ப உதவுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கென்யா நாட்டைப் பொறுத்தவரையில் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், நாட்டிற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், நாட்டின் இளையோரையும் ஒன்றிணைத்துச் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் கென்ய ஆயர் Peter Kimani Ndung’u.

கென்ய ஆயர் பேரவையின் இளையோர் பணிக்கான அவையின் துணைத் தலைவர் ஆயர் Kimani உரைக்கையில், மக்களுள் முக்கியத்தும் குறைந்தவர்கள் என்று எவரும் இல்லை, அதிலும் குறிப்பாக இளையோர் என்பவர், நாட்டைக் கட்டியெழுப்புவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பதை மனதில்கொண்டு, அவர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதிகாரத்தில் இருப்போர் அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் பங்களிப்பை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சியான மனநிலையுடன் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட ஆயர், சமூக பொருளாதார வளர்ச்சிக்கென அவர்கள் ஆற்றும் பங்கு சிறிதாக இருந்தாலும், ஒன்றிணைந்த அவர்களின் முயற்சி வலுவான நாட்டைக் கட்டியெழுப்புவதில் சிறப்புச் சேவையாற்றுகிறது என்றார்.

நாம் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டிருந்தாலும், எந்த வேலையைச் செய்பவர்களாக இருந்தாலும், பணக்காரர், அறிவாளி, உயரமானவர், வித்தியாசமான தோற்றம் கொண்டவர் என்ற வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அவைகளையெல்லாம் தூர ஒதுக்கிவைத்துவிட்டு, ஒவ்வொருவரையும் மதிக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் ஆயர் கிமானி.

நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல கல்வி நிலையங்களிலிருந்து பெறும் அறிவு முக்கியம் என்பதால், கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும், மனித வாழ்வில் இறைவனுக்கு வழங்க வேண்டிய முக்கிய இடம் குறித்தும் எடுத்துரைத்த ஆயர் கிமானி அவர்கள், பேரிடர்கள், நம்பிக்கையின்மைகள், வேலைவாய்ப்பின்மைகள், குடும்ப முறிவுகள், நிச்சயமற நிலைகள், ஏமாற்றங்கள், ஏனையை நெருக்கடிகள் போன்றவற்றில் திருஅவையின் முழு ஆதரவையும் இளையோருக்கு வழங்குவதாக உரைத்து, அரசுத்தலைவர்களின் ஆதரவுக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஜூலை 2025, 15:37