தென்சூடான் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
தென்சூடான் நாட்டில் நிலவி வரும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளனர் தென்சூடான் ஆயர்கள்.
ஜூலை 7 முதல் 11 வரை ஜூபாவில் நடைபெற்ற தென் சூடான் ஆயர்களுக்கான ஆண்டு க்கூட்டத்தின்போது வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் அமைதியை வலியுறுத்தி இவ்வாறு தெரிவித்துள்ளனர் தென்சூடான் ஆயர்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான பாதுகாக்கப்பட்ட மையங்களை முகாம்களை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர்கள், நம்பிக்கை மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான அமைப்புகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பணியாற்றி உதவும் வகையில், மனிதாபிமானப் பொருட்களை வரிவிதிப்பிலிருந்து விலக்குதல் செய்யப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளனர்.
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும் (திருப்பாடல் 85:10) என்ற திருப்பாடலின் வரிகளோடு தங்களது அறிக்கையை தொடங்கி இருக்கும் ஆயர்கள், தென்சூடான் நாடு எதிர்கொள்ளும் ஆழமான அரசியல், சமூக, பாதுகாப்பு, பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எடுத்துரைத்து அதற்காக செபிப்பதாகவும் சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க அரசை வலியுறுஹ்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென்சூடானிற்கு வருகை தந்தபோது மக்களோடு தனது உடனிருப்பையும் அன்பையும் ஆழமாக வெளிப்படுத்தினார் என்று தெரிவித்துள்ள ஆயர்கள், அவரது தலைமைத்துவப் பணியில் அமைதி மற்றும் நீதியில் தென்சூடான் மக்கள் எப்போதும் நிலைத்து நிற்க அதிகமாக வலியுறுத்தி செபித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
"நீதியையும் அமைதியையும் தழுவிக்கொள்வோம்" என்ற தலைப்பில் தென்சூடான் நாட்டில் அமைதி நிலவ வேண்டி அனுப்பிய அவசர அறிக்கையில் தென்சூடான் நாட்டின் அரசு, மற்றும் அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கும் கருத்துக்கள் பல்வற்றைக் குறிப்பிட்டுள்ளனர் ஆயர்கள்.
நாடு முழுவதும் மோசமடைந்து வரும் நிலைமையை ஆழ்ந்த வருத்தத்துடன் விவரித்த ஆயர்கள், வான்வழி குண்டுவெடிப்புகள், பதுங்கியிருந்து தாக்குதல்கள், கடத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள், வன்முறைத் தாக்குதல்கள் போன்றவற்றால் நாட்டில் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை பற்றியும் கூறியுள்ளனர்.
தொடர் வன்முறையால் சமூகங்கள் பிளவுபடுத்தப்படுகின்றன என்றும், குழந்தைகள் வலுக்கட்டாயமாக போராளிகளாக சேர்க்கப்படுகிறார்கள், அதிகரித்து வரும் பசி மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்