அன்னை ஓர் அதிசயம் – Pietralba அன்னைமரியா திருத்தலம், இத்தாலி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வட இத்தாலியில் அமைந்துள்ள Trentino-Alto Adige என்ற பகுதி, தன்னாட்சியுடன் இயங்கிவரும் ஒரு மாநிலமாகும். ஒரு காலத்தில் ஆஸ்ட்ரிய-ஹங்கேரியின் ஒரு பகுதியாக இருந்துவந்த இந்த மாநிலத்தை ப்ரெஞ்ச் பேரரசும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ப்ரெஞ்ச் பேரரசர் நெப்போலியன் 1815ம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இப்பகுதி மீண்டும் ஆஸ்ட்ரியாவின்கீழ் வந்தது. இப்பகுதியிலுள்ள உயரமான மலைகள் Dolomite மலைகள் என அழைக்கப்படுகின்றன. முதல் உலகப் போரின்போது பெரிய தாக்குதல்கள் இந்த Dolomite மற்றும் இத்தாலிய ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. பல காலம் ஆஸ்ட்ரியாவின் ஆட்சியின்கீழ் இப்பகுதி இருந்ததால் இங்குள்ள மக்கள் ஜெர்மன் மொழி பேசுகின்றனர். சாலைகளின் பெயர்களும் ஜெர்மானியத்தில் உள்ளன. Trentino-Alto Adige பகுதி 1970களில் தன்னாட்சி பெற்று Trentino, Alto Adige என்ற இரண்டு மாவட்டங்களின் நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த Alto Adige மாவட்டத்திலுள்ள முக்கியமான அன்னைமரியா திருத்தலங்களில் Pietralba அன்னைமரியா திருத்தலமும் ஒன்றாகும். 1520 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள Pietralba அன்னைமரியா திருத்தலம், Nova Ponente என்ற ஊருக்கும் புனித பீட்டர் மலைக்கும் இடையில் அமைந்துள்ளது. Bolzano என்ற நகரத்திலிருந்து இதனைத் தெளிவாகப் பார்க்கலாம்.
Pietralba என்ற இடத்திலுள்ள இந்த அன்னைமரியா திருத்தலத்தின் வரலாறு 1547ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அவ்விடத்தில் Leonhard Weißensteiner என்பவரின் குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவந்தது. 1547ம் ஆண்டில் Leonhardவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால், அவ்விடத்தில் வாழ்ந்தவர்களுக்கும் தனது குடும்பத்துக்கும் தலைவராக இருந்துவந்த அவரால் தொடர்ந்து தனது தலைமைப் பணியைச் செய்ய முடியாமல் வேதனையுற்றார். இதனால் தனக்கு நல்ல உடல்நலம் தருமாறு அன்னைமரியாவிடம் வேண்டினார். அவருக்குத் தெரிந்த ஒரே செபமான செபமாலையைச் செபித்தார். அன்னைமரியாவும் அவரது வேண்டுதலைக் கேட்டு அவரைக் குணமடையச் செய்வதற்காகக் காட்சி கொடுத்தார். அக்காட்சியின்போது, ‘நான் உனக்குக் குணமளிக்கிறேன், ஆயினும் அதற்கு நன்றியாக நீ இவ்விடத்தில் ஒரு சிற்றாலயமும், மணிக்கூண்டும் கட்ட வேண்டும். ஒவ்வொரு நாள் மாலையிலும் நீ அந்த மணியை அடிக்க வேண்டும். அந்த மணியொலியைக் கேட்கும் மக்கள் இங்கு வந்து செபிப்பார்கள். அவர்களுக்கு நான் இறைவனின் கருணையைப் பெற்றுக் கொடுப்பேன்’ என்று கூறினார். லியோனார்தும் ஆலயம் கட்டுவதாக ஆர்வமுடன் அதற்குப் பதில் சொன்னார். அவருக்கு நற்சுகமும் கிடைத்தது.
ஆயினும் நாள்கள் செல்லச் செல்ல லியோனார்து அன்னைமரியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்தே போனார். மீண்டும் தனது நிலத்துக்குச் சென்று வேலைச் செய்யத் தொடங்கினார். சில ஆண்டுகள் கடந்து, மீண்டும் லியோனார்து நோயுற்றார். கடும் காய்ச்சலால் தாக்கப்பட்டு மிகவும் வேதனைப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரைத் தனியே விடவில்லை. அவருக்கு எந்நேரமும் உதவி தேவைப்பட்டது. அவர்கள் அவரோடு இருக்க முடியாத நேரங்களில் அவர் கட்டிலைவிட்டு எழுந்துவிடாதபடி அதோடு சேர்த்துக் கட்டிவைத்துவிட்டுச் சென்றனர். ஒருநாள் அவரது குடும்பத்தினர் இல்லாதபோது அங்கிருந்து காட்டுக்குள் சென்றார் லியோனார்து. ஏனெனில் Pietralba காடுகள் அடர்ந்த உயரமான மலைப்பகுதியாகும். அப்படிச் செல்லும்போது உயரமான இடத்திலிருந்து அவர் சறுக்கி கீழே விழுந்தார். ஆனால் காயம் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. அப்போது அன்னைமரியா மீண்டும் லியோனார்துவுக்குக் காட்சி கொடுத்தார். முன்பு தனக்குக் கொடுத்த வாக்குறுதியை லியோனார்து காப்பாற்றவில்லை என்பதையும் அன்னைமரியா நினைவுபடுத்தினார். லியோனார்து மனம் வருந்தினார். வீடு திரும்பியதும் உடனடியாக தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக உறுதியுடன் கூறினார். அப்போது அன்னைமரியா புன்முறுவலுடன் தான் மற்றுமோர் அடையாளம் தருவதாகச் சொன்னார்.
நீ விழுந்த இந்த இடத்தில் எதுவும் உண்ணாமலும் குடிக்காமலும் ஒன்பது பகலும் ஒன்பது இரவும் இருப்பாய். உன்னைத் தேடிக்கொண்டிருக்கும் உனது குடும்பத்தினர் உன்னை நல்ல சுகத்துடன் உயிரோடு கண்டுபிடிப்பார்கள், என்று கூறினார் அன்னைமரியா. அன்னைமரியா சொன்னதுபோல அனைத்தும் நடந்தன. இக்காட்சி 1553ம் ஆண்டில் இடம்பெற்றது. லியோனார்து வீடு திரும்பியதும் உடனடியாக மண்வெட்டியையும் சட்டியையும் எடுத்துக்கொண்டு அன்னைமரியா தனக்கு முதன்முறையாகத் தோன்றிய பகுதியில் சிற்றாலயம் கட்டுவதற்கு அவ்விடத்தைத் தோண்டினார். அங்கு வெண்மை நிறத்தில் ஒரு சிறிய பியெத்தா அன்னைமரியா திருவுருவம் கிடைத்தது. இதுவே அவருக்குத் தான் கண்ட காட்சியை உறுதி செய்தது. அவ்விடத்தில் ஒரு சிறிய ஆலயத்தையும் மணிக்கூண்டையும் கட்டினார். இந்த ஆலயமும் பியெத்தா அன்னைமரியா திருவுருவமும் இன்றும் உள்ளன. தினமும் மாலையில் மகிழ்ச்சியுடன் மணி அடித்தார். மக்கள் அங்கு வந்துச் செபிக்கத் தொடங்கினர். அதோடு இறைவனது அருள்வரங்களையும் பெற்றுச் சென்றனர். அதனால் அந்த இடம் அன்னைமரியா அருள் வழங்கும் இடம் என அழைக்கப்பட்டது.
1571ம் ஆண்டில் லியோனார்து இறந்தார். அவர் இறந்தது குறித்து புனித பீட்டர் மலை பங்குத்தள ஆலயத்தின் முன்பாக உள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. லியோனார்துவின் இறப்புக்குப் பின்னர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அவ்விடத்தின் ஆலயத்தை விரிவாக்கும் பணி தொடங்கியது. 1638ம் ஆண்டில் பெரிய திருத்தலம் கட்டும் பணி ஆரம்பமானது. பாரூக் கலைவண்ணத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. 1718ம் ஆண்டில் மரியின் ஊழியர் சபைத் துறவிகள் ஆஸ்ட்ரியாவின் Innsbruckலிருந்து வந்து அங்கு ஒரு துறவு இல்லத்தைக் கட்டித் திருப்பயணிகளின் ஆன்மீகத் தேவைகளைக் கவனித்துக் கொண்டனர். அக்காலத்தில் இவ்விடத்துக்குச் செல்ல சாலைகள் இல்லை. மக்கள் மலைப் பாதையில் நடந்தே திருப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்தவேளை, 1787ம் ஆண்டில் ஆஸ்ட்ரியப் பேரரசர் 2ம் ஜோசப் இந்த Pietralba அன்னைமரியா திருத்தலத்தை மூடினார். அதோடு, அங்கிருந்தத் துறவியர் சமய நடவடிக்கைகளைச் செய்யக்கூடாது எனத் தடை விதித்தார். அத்திருத்தலத்தின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார். லியோனார்து வைத்த பியெத்தா அன்னைமரியா திருவுருவத்தையும் Laivesக்கு இடம் மாற்றினார். திருத்தலத்தின் மூன்று கோபுரங்களும் அழிக்கப்பட்டன. மக்கள் நன்றியாகச் செலுத்திய பொருள்களும் எடுக்கப்பட்டன.
ஆயினும் அந்த இடத்தை வாங்கிய Bolzanoவைச் சேர்ந்த Johann Gugler என்பவர் அத்திருத்தலத்தையும், துறவியர் இல்லத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றினார். அரசின் தடைகள் நீங்கிய பின்னர் 1836ம் ஆண்டில் Innsbruckலிருந்து மரியின் ஊழியர் சபை துறவிகள் மீண்டும் அத்திருத்தலம் சென்று தங்களது பணிகளைத் தொடங்கினர். 1885ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி Pietralba அன்னைமரியா திருத்தலம் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டது. லியோனார்து முதலில் எடுத்த சிறிய பியெத்தா திருவுருவம் தற்போது அப்பசிலிக்காவின் மையப் பீடத்தில் உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. லியோனார்து இந்தச் சிறிய பியெத்தா திருவுருவத்தை ஒரு மரத்தில் கண்டுபிடித்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் அக்காலத்தில் பாதுகாவலுக்காக அன்னைமரியா மற்றும் புனிதர்களின் திருவுருவங்களை மரங்களில் வைப்பது வழக்கமாக இருந்தது.
பியெத்தா என்ற வியாகுல அன்னைமரியா திருவுருவம் இன்று ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது. அன்னைமரியாவின் பரிந்துரையால் தாங்கள் பெற்ற வரங்களுக்கு நன்றியாக பல அடையாளப் பொருள்களை மக்கள் வைத்துள்ளனர். வேளாங்கண்ணியில் காணிக்கை அருங்காட்சியகம் போன்று Pietralba அன்னைமரியா திருத்தலத்திலும் உள்ளது. கூட்டம் கூட்டமாய் திருப்பயணிகள் இத்திருத்தலம் வந்து செபித்து உடலிலும் உள்ளத்திலும் நற்சுகம் பெற்றுச்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்