அருள்சகோதரி Giovanna Llerena Alfaro மக்களுடன்  அருள்சகோதரி Giovanna Llerena Alfaro மக்களுடன்  

ஆன்மிக செழுமை நிறைந்த இடம் மறைப்பணிக்கான இடம்

ஓர் இளம் பெண்ணாக, அமேசான் காட்டில் ஒரு மறைப்பணியாளராக பணியாற்றும் மனப்பான்மையுடன், 2017-ஆம் ஆண்டு கஸ்கோவின் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு செவிலியராகத் தனது பணியைத் தொடங்கிநார் அருள்சகோதரி ஜொவான்னா.

மெரினா ராஜ் – வத்திக்கான்

“உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில், நீ நிற்கும் இடம் புனிதமானது” என்ற விவிலிய வார்த்தைக்கேற்ப நாம் நமது மறைப்பணி என்னும் புனிதமான இடத்தில்,  நமது கருத்துக்கள், மனக் கட்டமைப்புக்கள் மற்றும் முதன்மையானவர்கள் என்ற எண்ணம் போன்ற காலணிகளைக் கழட்டிவிட வேண்டும் என்றும், நமது மறைப்பணிக்கான இடம் சந்திப்பு, ஒன்றுடன் ஒன்று தொடர்பு, கலாச்சார மற்றும் ஆன்மிக செழுமை நிறைந்த இடம் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி ஜொவான்னா லெரெனா அல்ஃபாரோ. (Giovanna Llerena Alfaro)

பெருவின் கஸ்கோ காட்டின் மையத்தில், பாஜோ உருபாம்பாவின் பழங்குடி சமூக மக்களுக்கு ஆற்றும் மறைப்பணி பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு பகிர்ந்துள்ளார் தூய தொமேனிக்கன் செபமாலை அன்னை சபையைச் சார்ந்த அருள்சகோதரி Giovanna Llerena Alfaro.

நாம் மறைப்பணியாற்றும் இடத்தில்  கடவுள் நிறைந்து இருக்கின்றார் என்ற உணர்வினை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அருள்சகோதரி ஜொவான்னா அவர்கள்,   

திருஅவையின் மிகவும் தேவைப்படும் இடங்களில் நற்செய்தியை அறிவித்தல் என்னும் தனது சபையின் தனிவரத்திற்கேற்ப தான் பணியாற்றுவதாகவும், தற்போது அமேசான் தலத்திருஅவைக்குத் தங்களது தேவை இருக்கின்றது என்று உணர்வதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

ஓர் இளம் பெண்ணாக, காட்டில் ஒரு மறைப்பணியாளராக பணியாற்றும் மனப்பான்மையுடன், 2017-ஆம் ஆண்டு கஸ்கோவின் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு செவிலியராகத் தனது பணியைத் தொடங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து அவர்களது சபை இல்லமானது பெருவின் அமேசானிலும் 2018-ஆம் ஆண்டு பாஜோ உருபம்பாவிலும் உருவாக்கப்பட்டதாகப் பகிர்ந்துகொண்டார் அருள்சகோதரி ஜொவான்னா.

மாட்சிஜென்காஸ், அஷானின்காஸ், காகின்டெஸ் மற்றும் நான்டிஸ் என்னும் நான்கு இனக்குழுக்களைச் சேர்ந்த 26 சமூகங்களைச் சார்ந்த மக்களுக்குப் பணியாற்றுவதாகவும்,

இந்த கிராமங்களைச் சென்றடைய, அவரும் அவரது குழுவினரும் ஓடும் ஆறுகளில் மணிக்கணக்கில் பயணம் செய்து, கடவுளின் வார்த்தையையும் நம்பிக்கையையும் பல இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர் என்றும் தெரிவித்தார் அருள்சகோதரி ஜொவான்னா.

கல்விப் பயிற்சிக்கு அப்பாற்பட்ட சூழலில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களுக்கு கல்விப்பயிற்சி அளித்து, சந்திப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான இடங்களாக மாற்றியுள்ளதாகவும், இளைஞர்கள் தங்கள் சமூகங்களை நம்பிக்கையிலும் அர்ப்பணிப்பிலும் மாற்றும் திறன் கொண்ட எதிர்காலத் தலைவர்களாக மாற முடியும் என்பதை அதிகமாக வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார் அருள்சகோதரி ஜொவான்னா.

அமைதி மற்றும் காத்திருப்பு காலங்களில் விதைக்கப்பட்ட நட்பு மற்றும் நெருக்கத்தின் பிணைப்புகள், இப்போது நிலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் அதன் கலாச்சாரமாகவும் தன்னை அங்கீகரிக்கும் ஒரு பழங்குடி தலத்திருஅவையில் செழித்து வருகின்றன என்றும், அண்மைய ஆண்டுகளில், சமூகம், உருவாக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயல்முறையால் வலுப்படுத்தப்பட்டு ஆழமான மாற்றங்களை அனுபவித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் சகோதரி ஜொவான்னா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஆகஸ்ட் 2025, 11:41