தடம் தந்த தகைமை : சிங்கக் குகையில் தானியேல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான். தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக்குரலில் அவன் தானியேலை நோக்கி, “தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா?’ என்று உரக்கக் கேட்டான். அதற்குத் தானியேல் அரசனிடம், “அரசரே! நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே! என்று மறுமொழி கொடுத்தார்.
எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார். பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன. அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவர்க்கும் நாட்டினர்க்கும் மொழியினர்க்கும் ஓர் அறிக்கை விடுத்தான். “உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை" என்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்