புனித பூமியில் அமைதி நிலவ இத்தாலிய ஆயர் பேரவை அறிக்கை
மெரினா ராஜ் – வத்திக்கான்
காசாவில் ஒரு முழு மக்களுக்கும் எதிரான அனைத்து வகையான ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைகளையும் நிறுத்த வேண்டும் என்றும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் பன்னாட்டு மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது இத்தாலிய ஆயர் பேரவை.
செப்டம்பர் 24, புதனன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் புனித பூமியில் அமைதி நிலவட்டும்! என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ள இத்தாலிய ஆயர் பேரவையானது, இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலால் தாக்கப்பட்டு ஹமாஸால் அழுத்தம் கொடுக்கப்படும் பாலஸ்தீன மக்களின் கட்டாய நாடுகடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
"இரண்டு மக்கள், இரண்டு நாடுகள்" என்ற வாய்ப்பு எதிர்காலத்திற்கான சாத்தியமான பாதையாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஆயர் பேரவையானது, இந்த காரணத்திற்காக, நடந்து வரும் விரோதங்களை முடிவுக்குக் கொண்டுவர இத்தாலிய அரசாங்கத்தையும் ஐரோப்பிய நிறுவனங்களையும் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும் என்ற அரசு சமூகத்தின் வேண்டுகோள்களோடு இணைவதாகவும் எடுத்துரைத்துள்ளது.
கிறிஸ்துவே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். (எபே 2:14) என்ற திருத்தூதர் புனித பவுலின் வார்த்தைகளால் தூண்டப்பட்டு அமைதியை வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்துள்ளது இத்தாலிய ஆயர் பேரவையின் அறிக்கை.
வருகின்ற அக்டோபர் மாதத்தில் அமைதிக்காக செபமாலை செபிக்க வலியுருத்திய திருத்தந்தை அவர்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வறிக்கையானது, வரலாற்றின் நிகழ்வுகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், மரணம் மற்றும் அழிவை ஏற்படுத்தும் தேர்வுகளை விமர்சிக்கவும் வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளது.
"பயனற்ற படுகொலையின்" விளைவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதியான ஆதரவை வழங்க உறுதிபூண்டுள்ளாதாகவும், இத்தாலிய தலத்திருஅவையால் நிதியளிக்கப்பட்ட 145 திட்டங்கள் மற்றும் தற்போதைய அவசரநிலையைச் சமாளிக்க உதவித் திட்டங்கள் போன்றவற்றை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலிய ஆயர் பேரவை செய்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
துன்பப்படுபவர்களுடனான் உடனிருப்பு மற்றும் கட்சிகளுக்கு இடையே நல்லிணக்கத்திற்கான செயல்களை முன்மொழிவதாகவும், ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவின் ஆயர் பேரவைகளுடன் கையெழுத்திடப்பட்ட மேல்முறையீட்டின்படி, திருத்தந்தையுடன் இணைந்து, பாலங்களை உருவாக்குபவர்களாக மாற விரும்புவதாகவும் எடுத்துரைத்துள்ள இத்தாலிய ஆயர் பேரவையானது, அகிம்சை, உரையாடல், கேட்டல் மற்றும் சந்திப்பு ஆகியவற்றை சகோதரத்துவத்தின் ஒரு முறையாகவும் பாணியாகவும் செயல்படுத்துவதை உறுதிப்படுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்