திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – புதிய மறைசாட்சியாளர்கள், நம்பிக்கையின் சான்றாளர்களுக்கான நினைவு நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 14, ஞாயிறன்று திருஅவையில் புதிய மறைசாட்சியாளர்கள், நம்பிக்கையின் சான்றாளர்களுக்கான நினைவு நாளானது சிறப்பிக்கப்படுகின்றது. எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டில் திருஅவையில் வாழ்ந்தௌ கிறிஸ்தவ நம்பிக்கைக்காக தங்களது உயிரைக் கையளித்த புதிய மறைசாட்சியாளர்கள் மற்றும் நம்பிக்கையின் சான்றுகளாகத் திகழ்ந்தவர்களை நினைவு கூரும் நாளானது கொண்டாடப்பட இருக்கின்றது.
21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைசாட்சிகளாகத் தங்களது உயிரைக் கையளித்த அனைவரையும் நினைவுகூர்து செபிக்கும் இந்நாளைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சிறப்பிக்க இருக்கின்றார். செப்டம்பர் 14, ஞாயிறு உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு சிறப்பு வழிபாட்டிற்குத் தலைமையேற்று சிறப்பு செய்ய இருக்கின்றார் திருத்தந்தை.
இந்நிகழ்வு குறித்த ஏற்பாடுகளை கிறிஸ்தவ ஒன்றிப்பு அலுவலகத்தின் பொறுப்பாளர் பேரருள்திரு மார்கோ ஞாவி, பல்சமய உரையாடல், உரோம் மறைமாவட்டத்தின் புதிய கலாச்சாரம், புதிய மறைசாட்சியாளர்களுக்கான கமிசனின் செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்த இருக்கின்றன. திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க எந்த விதமான நுழைவுச்சீட்டும் தேவையில்லை எனினும் நிகழ்வு துவங்க ஒருமணி நேரத்திற்கு முன்னதாக வருவது நலம் என்றும் இவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 14 அன்று நடைபெறும் கொண்டாட்டம், யூபிலி ஆண்டு முழுவதும் உரோமில் நடைபெறும் கிறிஸ்தவ கொண்டாட்டத்தின் இணைப்பாக இருக்கும் என்று ஆணையத்தின் தலைவர் பேரருள்திரு ஃபேபியோ ஃபேபீன் அவர்கள் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 14ம்,அன்று திருச்சிலுவை மகிமைக்கென குறிக்கப்பட்ட நாளாக கத்தோலிக்கத் திருஅவையில் மட்டுமல்லாது பிற தலத்திருஅவை ஆலயங்களிலும் சிறப்பாகக் கொண்டாட இருக்கும் நாளில் புதிய மறைசாட்சியாளர்களுக்கான நாளும் கொண்டாடப்பட இருப்பது மிகச்சிறப்பான ஒன்று என்றும் எடுத்துரைத்துள்ளார். மேலும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் பிறந்த நாளன்று இந்த நாள் கொண்டாடப்படுவது மேலும் சிறப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவைப் பின்பற்றி, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதன் வழியாகவும், அவருடைய அன்பின் பரிசை வரவேற்பதன் வழியாகவும், நம் சிந்தனை முறையை மாற்றியமைப்பதன் வழியாகவும்,நாமும் கடவுளின் செயலைக் கற்றுக்கொள்ளலாம்: கடவுளின் செயல், பணியாற்றுவது. பணியாற்றுவதற்கான கடவுளின் செயல் மூன்று வார்த்தைகளை உள்ளடக்கியது. அவை நெருக்கம், இரக்கம் மற்றும் மென்மை. கடவுள் இறைப்பணியாற்ற நம்மை நெருங்கி வருகிறார்; இரக்கமுள்ளவராக நம்மை மாற்றுகிறார்; மென்மையான அன்பாக நம்மை மாற்றுகின்றார். நாம் பிறருக்காகப் பணியாற்றக் கற்றுக்கொண்டால், நமது ஒவ்வொரு கவனமும் அக்கறையும், மென்மையின் ஒவ்வொரு வெளிப்பாடும், கருணையின் ஒவ்வொரு செயலும் கடவுளின் அன்பின் பிரதிபலிப்பாக மாறும். என்பதை உணர்ந்து வாழ்வோம் இவ்வுலகில் படைக்கப்பட்ட நாம் அனைவரும் புனிதர்களாக வாழப் படைக்கப்பட்டவர்கள். சிலர் அப்புனித நிலையை இயல்பான தங்களது வாழ்வின் மூலம் பெறுகின்றனர். மற்றும் சிலர் மறைசாட்சியாக் கிறிஸ்துவிற்காக இரத்தம் சிந்தி தங்களை அர்ப்பணித்துப் பெற்றுக்கொள்கின்றனர். நாமும் புனிதர்களாக மாற முயல்வோம். மறைசாட்சிய வாழ்வினை மனதார ஏற்போம். மறைசாட்சிகளின் அருளினை நாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்