தடம் தந்த தகைமை – அரசன் எரோபவாம் கைப்பற்றிய நகர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
எரொபவாம் பதுங்கிச்செல்லும் ஒரு படையை அனுப்பி, யூதாவைப் பின்புறம் சுற்றி வளைக்கச் செய்தான்; அவனோடிருந்த படையோ யூதாவின் முன்னே நின்றது. யூதாவின் வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, அவர்களை முன்னும் பின்னும் எதிர்க்கும் படைகளைக் கண்டனர். உடனே அவர்கள் ஆண்டவரை நோக்கி, அபயக் குரலிட, குருக்கள் எக்காளங்களை ஊதினர். யூதாவின் வீரர்கள் போர் முழக்கமிட்டனர்; அப்படி முழக்கமிட்டபோது, கடவுள் அபியா, யூதா முன்பாக எரொபவாமையும் இஸ்ரயேலர் எல்லாரையும் முறியடித்தார். இஸ்ரயேலர் யூதாவுக்குப் புறமுதுகு காட்டி ஓடினர். கடவுள் இஸ்ரயேல் மக்களை யூதாவிடம் கையளித்தார். அப்பொழுது, அபியாவும் அவன் மக்களும் அவர்களைப் பெருமளவில் வெட்டி வீழ்த்தி, இஸ்ரயேலில் ஆற்றல்மிகு ஐந்து இலட்சம் வீரர்களைக் கொன்றனர்.
அந்நேரத்தில், இஸ்ரயேலின் புதல்வர் சிறுமையுற, தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரை நம்பி வாழ்ந்த யூதாவின் புதல்வர் வலிமையுற்றனர். பின்பு, அபியா எரொபவாமைத் துரத்திச்சென்று, பெத்தேலையும் அதன் சிற்றூர்களையும், எசானாவையும் அதன் சிற்றூர்களையும், எப்ரோனையும் அதன் சிற்றூர்களையும் அவனிடமிருந்து கைப்பற்றினான். அபியாவின் வாழ்நாள் முழுவதும், எரொபவாம் வலிமையுறவில்லை. ஆண்டவர் அவனைத் தண்டிக்க, அவனும் இறந்தான். பின்பு, அபியா மிகுந்த வலிமை அடைந்தான்; அவனுக்குப் பதினான்கு மனைவியரும், இருபத்திரண்டு புதல்வரும், பதினாறு புதல்வியரும் இருந்தனர். அபியாவின் பிற செயல்கள் யாவும், அவன் வழிமுறைகளும் உரைகளும், இறைவாக்கினர் இத்தோ எழுதிய ஆய்வேட்டில் எழுதப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்