தடம் தந்த தகைமை – யூதா மக்களோடு ஆசா செய்த உடன்படிக்கை
மெரினா ராஜ் – வத்திக்கான்
யூதா, பென்யமின் மக்களையும், எப்ராயிம், மனாசே, சிமியோனிலிருந்து வந்து தங்களோடிருந்த அந்நியர் அனைவரையும் ஒன்று கூட்டினான். ஆசாவின் கடவுளாகிய ஆண்டவர் அவனோடிருந்ததைக் கண்டு, அவர்கள் இஸ்ரயேலைவிட்டு அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தனர். ஆசா ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டின் மூன்றாம் மாதத்தில், அவர்கள் எருசலேமில் கூடினர். தாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு வந்த எழுநூறு மாடுகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர். அவர்கள் தங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும் தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நாடுவோம் என்றும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை யார் யார் நாடாமல் இருக்கிறார்களோ அவர்கள், சிறியோர் பெரியோர், ஆண் பெண் யாராயினும், சாவுக்கு உட்பட வேண்டும் என்றும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். எக்காளங்களும் கொம்புகளும் முழங்க, மிகுந்த ஆரவார ஆர்ப்பரிப்புடன் ஆண்டவரிடம் ஆணையிட்டார்கள். இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்; ஏனெனில், அவர்கள் தங்கள் முழு இதயத்தோடு ஆணையிட்டனர், ஆர்வத்துடன் அவரை நாடிக் கண்டடைந்தனர்;
ஆண்டவரும் அவர்களுக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார். அருவருப்பான அசேராக் கம்பம் ஒன்றை ஆசாவின் தாய் மாக்கா செய்திருந்தாள். அதனால், ஆசா அவளை ‘அரச அன்னை’ நிலையிலிருந்து நீக்கி விட்டான். மேலும், அவன் அக்கம்பத்தை உடைத்துத் தூள் தூளாக்கிக் கிதரோன் பள்ளத்தாக்கில் சுட்டெரித்தான். ஆனால், தொழுகை மேடுகள் இஸ்ரயேலினின்று அகற்றப்படவில்லை; இருப்பினும் ஆசாவின் இதயம் அவன் வாழ்நாள் முழுவதும் நிறைவுள்ளதாய் இருந்தது. தன் தந்தையும் தானும் நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் மற்றும் ஏனைய பொருள்களையும் கடவுளின் இல்லத்தில் அவன் ஒப்படைத்தான். ஆசா ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டுவரை மீண்டும் போர் எழவில்லை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்