தடம் தந்த தகைமை - பொய் வாக்கினர்களும் இஸ்ரயேல் மக்களும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
யோசபாத்து மிகுந்த செல்வமும் புகழும் பெற்றிருந்தார்; திருமணத்தின் வழியாக ஆகாபுடன் உறவுமுறை கொண்டார். சில ஆண்டுகளுக்குப்பின், ஆகாபைச் சந்திக்க அவர் சமாரியா சென்றார். மிகுதியான ஆடுமாடுகளை அடித்து அவருக்கும் அவர் ஆள்களுக்கும் விருந்தளித்த ஆகாபு இராமோத்து-கிலயாதிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு அவரைத் தூண்டினான். இஸ்ரயேலின் அரசனான ஆகாபு யூதாவின் அரசன் யோசபாத்தை நோக்கி, “இராமோத்து-கிலயாதை எதிர்க்க என்னோடு வருவீரா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத்து அவனிடம் “உம்மைப் போலவே நானும் தயார்; உம் மக்களைப் போலவே என் மக்களும்; நான் உமக்குத் துணையாகப் போருக்கு வருவேன்” என்றார். யோசபாத்து இஸ்ரயேல் அரசனை நோக்கி, “ஆண்டவரின் வாக்கு எதுவென இன்று நீர் கேட்டறிய வேண்டுகிறேன்” என்றார்.
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் நானூறு பொய்வாக்கினரை வரவழைத்தான். “நாங்கள் இராமோத்து கிலயாதிற்கு எதிராகப் படையெடுக்கலாமா, வேண்டாமா?” என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள், “போங்கள்; ஏனெனில், அரசன் கையில் கடவுள் அதை ஒப்படைப்பார்” என்று பதிலளித்தனர். ஆனால் யோசபாத்து, “நாம் கேட்டறிவதற்கு இங்கே ஆண்டவரின் இறைவாக்கினர் யாருமில்லையா?” என்று கேட்க, அதற்கு ஆகாபு, “ஆண்டவரின் வாக்கைக் கேட்டறிவதற்கு இம்லாவின் மகன் மீக்காயா என்பவன் இருக்கிறான். ஆனால், நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில், எனக்குச் சாதகமாய் அன்று, பாதகமாவே எப்பொழுதும் இறைவாக்கு உரைக்கிறான்” என்றான். அதற்கு யோசபாத்து, “அரசே நீர் அவ்விதமாய்ப் பேசவேண்டாம்” என்றார். உடனே இஸ்ரயேலின் அரசன் ஓர் அலுவலரிடம், “இம்லாவின் மகன் மீக்காயாவை உடனே அழைத்து வா” என்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்