அன்னை ஓர் அதிசயம் – மேரி மேஜர் பெருங்கோவில் - உரோம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
‘உரோம் மக்களுக்கு நலம் வழங்கும் அன்னை’ என்ற பொருள்கொண்ட 'Salus Populi Romani' என்ற பெயர் தாங்கிய அன்னை மரியாவின் திருப்படத்தைத் தாங்கியுள்ள ஆலயம் உரோமில் மிகச்சிறப்பு பெற்றது. உரோமில் உள்ள அன்னை மரியாவின் சிறப்பு மிக்க ஆலயமும் உலகெங்கிலும் உள்ள அன்னை மரியா ஆலயத்திற்கெல்லாம் முதன்மை ஆலயமாகத் திகழும் மேரி மேஜர் பெருங்கோவில் குறித்து இன்றைய நமது அன்னை ஓர் அதிசயம் என்ற நிகழ்வில் காணலாம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவின் மீது தனிப்பற்று கொண்டவர். 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி திருஅவையின் தலைமைப்பொறுப்பை ஏற்றதற்கு அடுத்தநாள், புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று அன்னை மரியாவின் படத்திற்கு முன் செபித்துவிட்டுத் திரும்பினார். அதேபோல் ஒவ்வொரு முறையும், திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பும், பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியதும், அன்னையின் திருப்படத்திற்குமுன் செபிப்பதை தன் வழக்கமாகக் கொண்டவர். கோவிட்-19 கொள்ளைநோயின் உலகளாவியப் பரவலையடுத்து, 2020-ஆம் ஆண்டு மார்ச் 27, வெள்ளியன்று, மக்களின் பங்கேற்பு ஏதுமின்றி, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் முன்புறம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய Urbi et Orbi வழிபாட்டில், Salus Populi Romani திருப்படமும் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தான் இறந்தபின் தனது உடல் அந்த அன்னையின் ஆலயத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். அதன்படியே அந்த அன்னையின் திரு உருவப்பட இருக்கும் சிற்றாலயத்தின் அருகில் உள்ள இடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறை வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க அன்னை மரியா பேராலயம் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை அருள் ஜான் போஸ்கோ. வேலூர் மறைமாவட்டத்தை சார்ந்த அருள்தந்தை அவர்கள் தற்போது உரோமில் மேய்ப்புப்பணி இறையியலில் முனைவர் பட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார் தந்தை அவர்களை மேரி மேஜர் பெருங்கோவில் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்