2023.09.07 India Bangalore festa della nativita Vergine Maria

அன்னை ஓர் அதிசயம் – பொத்தக்காலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தலம்

பொத்தக்காலன்விளை, திருக்கல்யாண மாதா திருத்தலம், அனைத்து மக்களையும் ஈர்க்கும் ஓர் ஒளிரும் தலமாக தூத்துக்குடி மறைமாவட்டம், சாத்தான்குளம் மறைவட்டத்தில் அமைந்துள்ளது.
திருக்கல்யாண மாதா ஆலயம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அனைவரும் ஓய்விவு எடுத்தாலும் கடலின் அலைகள் ஒரு போதும் ஓய்வெடுக்காது. அதுபோல திசைகள் பல மாறினாலும் திருக்கல்யாண மாதா மாறாது நமக்குத் துணையிருப்பார் என்பர். அன்னையின் அருளால் அளவற்ற ஆனந்தத்தைப் பெற்றவர் பலர். இன்பத்தை தரும் தாய் ஈன்ற பொழுதில் நம்மோடு இருக்கும் தாய் அந்தத்தாய்க்கெல்லாம் உயர்ந்த தாயாகத் திகழ்பவர் அன்னை மரியா. இவ்வுலகில் அன்னை மரியாவிற்குத் தான் அளவற்ற பெயர்கள். அதிலும் அன்னை மரியாவிற்கும் சூசைத்தந்தைக்கும் நடந்த திருமணத்தை முன்னிறுத்தி திருக்கல்யாண மாதா என்ற பெயரில் அனைவராலும் போற்றப்படுவது இன்னும் சிறப்பு பெற்றது. மேலை நாடுகளில் மட்டுமே சிறப்புடன் விளங்கிய இவ்விழாக்கள் ஆசியாவிலும் குறிப்பாக தென்தமிழகத்திலும் சிறப்பு பெற்றுக் கொண்டாடப்பட்டு வருகின்றது.அவ்வகையில் இன்றைய நமது அன்னை ஓர் அதிசயம் என்ற நிகழ்வில் பொத்தக்காலன்விளையில் இருக்கும் திருக்கல்யாண அன்னை மரியா திருத்தலம் பற்றியக் கருத்துக்களைக் காணலாம்.

பொத்தக்காலன்விளை, திருக்கல்யாண மாதா திருத்தலம், அனைத்து மக்களையும் ஈர்க்கும் ஓர் ஒளிரும் தலமாக தூத்துக்குடி மறைமாவட்டம், சாத்தான்குளம் மறைவட்டத்தில் அமைந்துள்ளது. ஊரைக் கட்டிக்காப்பவர்களுக்கு முக்கந்தர் என்ற பெயர் இருந்தது. கிராமங்களில் முக்கந்தர்களுக்குத்தான் முதல் மதிப்பு. 1450 ஆண்டளவில் முக்கந்தராக இருந்த ஒருவர் வலிமை மிக்கவராகவும், துணிச்சலானவராகவும் இருந்திருக்கிறார். இவர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இக்குடியிருப்புக்கு வெளியே உள்ள மக்கள் முக்கந்தரை பொத்தக்காலன் என்று அழைத்து பின்னர் இக்குடியிருப்பை பொத்தக்காலன்விளை என்று அழைத்திருக்கிறார்கள். அப்பெயரே இன்று வரை நிலைத்து பொத்தக்காலன்விளை என்று அழைக்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் மாதாவுக்கு சிறப்புபக்தி:-

பல ஆண்டுகளாக அன்னை மரியா மீது ஆழ்ந்த பற்று கொண்ட பிரான்ஸ் நாட்டு மக்களால் அன்னை மரியாவின் கல்யாண நிச்சயதார்த்தம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆண்டு தோறும் ஜனவரி 23ம் தேதி இவ்விழாவைக் கொண்டாடினார்கள். இவர்களது இந்த பக்தி முயற்சியை திருத்தந்தை மூன்றாம் சின்னப்பர் 1546ம் ஆண்டு அங்கீகரித்தார். அதனைத் தொடர்ந்து ஆரஸ் முறைப்படி 1556ம் ஆண்டு முதல் உலகெங்கும் ஜனவரி 23ம் தேதியை மாதாவின் கல்யாண நிச்சயதார்த்தம் என்று கொண்டாடினார்கள்.

திருக்கல்யாண மாதா ஆலயம்:-

திருக்கல்யாண மாதாவை வழிபட ஓரிடத்தை ஒதுக்கி வைத்திருந்தனர். அஃது ஓர் ஓலை குடிசை மழைக்காலங்களில் பெருவெள்ளம் ஏற்படும் போது வீடுகளும் செப குடிசையும் பெரிதும் பாதிக்கப்படுபவையாக இருந்தன. ஆண்டு தோறும் வெள்ளத்தால் அழிவதால் மீண்டும் மீண்டும் புதுப்பிப்பது கடினமாக இருந்தது. எனவே ஒரு கிணறு வெட்டி அதில் கிடைத்த கற்களைக் கொண்டும், கடற்கற்களைக் கொண்டும் ஒரு கட்டிடத்தை நிறுவ தீர்மானித்தனர். அவ்விதம் தான் 1623ம் ஆண்டு மூன்று பக்கங்களில் சுவர் வைத்து ஓர் அறையைக் கட்டினார்கள். யாரும் எப்போதும் உள்ளே வந்து செபிக்க வசதியாக அந்த குடிசை ஆலயமானதுக் கட்டப்பட்டது.

திருக்கல்யாண மாதா பெயரால் உலகில் ஒரே ஒரு ஆலயம்:-

மரியாவுக்கும் சூசையப்பருக்கும் ஏற்பட்ட திருமண நிச்சயதார்த்தத்தின் நினைவாக 1835-ல் திருக்கல்யாணமாதா ஆலயம் ஒன்று கட்டி அன்னையின் புகழ்பாடினர். பின்னர் 1971ல் தற்போதுள்ள புதிய திருக்கல்யாண மாதா ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14ம் தேதி கொடியேற்றி அன்னைமரியாளின் திருவிழா அன்னையின் திருமண ஒப்பந்த நாளாகிய ஜனவரி 23ம் தேதி திருவிழாவை சிறப்புற கொண்டாடி மகிழ்கிறார்கள். தமிழ் பண்பாட்டிலே வெற்றிலை பாக்கு என்பது மங்களகரமான நிகழ்வுகளின் போது பரிமாறப்படும் ஓர் அற்புத பொருள். எனவே திருவிழா கொடியேற்றத்திற்குப்பின் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு வழங்கப்படும்.

திருக்கல்யாண அன்னையின் திருவிழா அறிக்கை :-

பொத்தக்காலன்விளையைப் பொறுத்தமட்டில் திருக்கல்யாண மாதா திருவிழா அறிக்கை வாசிப்பது சற்று வித்தியாசமானது. இது திருமண அறிக்கை வாசிப்பது போன்று வாசிக்கப் படும். மூவொரு இறைவன் திருவருளால் நமது ஊர்ப் பொத்தக் காலன்விளையில் குடிகொண்டிருக்கும் தாவீதின் குலத் தவரான தந்தை யாக்கோபு தாய் லிதியாள் இவர்களின் திருநிறைச்செல்வன் சூசையப்பருக்கும் மேற்படி இடத்திலே குடி கொண்டிருக்கும் தாவீது இராஜ குலத்தில் உதித்த தந்தை சுவக்கீன், தாய் அன்னம்மாள் இவர்களின் அருந்தவப் புதல்வியான மரியாளுக்கும் ஜனவரி 23ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டதன் நினைவாக நிகழும் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் திருவுருவ சப்பரப்பவனியும் அதனைத் தொடர்ந்து அன்னையின் பக்த கோடிகள் சூழ்ந்து நிற்க மேள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கைகள் அதிர பாடகர்கள் பண்ணிசைக்க ஆலய மணிகள் ஒலிக்க கொடியேற்றம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து "ஒன்பது நாட்கள் நவநாள்வழிபாடுகளும் திருக்கல்யாண மாதா நிச்சயதார்த்த தினமாகிய 23-ம் தேதி ஆடம்பரத் திருப்பலியும் நடைபெறும் என்று பறைசாற்றப்படுகிறது” என்று அறிக்கை வாசிக்கப்படும்.

மக்களின் தொழில்:-

தொழுது தங்களுக்குள் உறவை வளர்க்கவும், பனைத்தொழிலே மக்களின் முதன்மையான தொழிலாக இருந்து வந்துள்ளமையால் பனைத்தொழிலை மேற்கொள்வதற்கு முன்னராக ஆலயம் பனை ஏறுவதற்காக காடுகளுக்குள் செல்வதால் எந்தவித பொல்லாப்புகளும், விலங்குகளால், விபத்துகளும் ஏற்படாமல், மீண்டும் நலமாக மக்கள் நடுவே வந்தடைய இறையருள் வேண்டி திருவிழாவைக் கொண்டாடினார்கள்.

புளியம்பட்டி அந்தோணியார் கோவில்:-

குடும்பச்சூழலில் தொம்மை அந்தோணி நாடாருக்கு ஊரைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடவுளின் வழிநடத்துதலிலே நம்பிக்கை கொண்ட அவர் இறுதியிலே சேர்ந்தார். புளியம்பட்டி வந்து அங்கு சிலருடைய அரவணைப்பு கிடைத்தது. இதற்கு நன்றியாகவும், புதிதாகக் குடியேறியுள்ள இடத்தில் தன்னையும் தன்னை அரவணைக்கிற அனைவரையும் எந்தவித தீங்குகளும் நேரிடாமல் அரவணைத்து இறைவன் காத்தருள வேண்டுமென்று குடிசை ஆலயம் ஒன்றை நிறுவினார் அதுவே இன்றைய அந்தோணியார் திருத்தலம் உருவாகுவதற்கு அடிக்கல் என்று வரலாறு கூறுகிறது. இந்நிகழ்வு 17ம் நூற்றாண்டில் நடைபெற்றுள்ளது.

திருக்கல்யாண மாதா:-

அருட்தந்தை மஸ்கிரனாஸ் பொத்தக்காலன்விளையில் பங்குத் தந்தையாக 1949ல் பொறுப்பேற்றதும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு திபூர்சியஸ் ரோச் அவர்களிடம் திருக்கல்யாண மாதா கோயில் பற்றி கூறி ஆயரின் அனுமதியுடன் பொத்தக்காலன்விளையில் அமைந்துள்ள நமது ஆலயம் திருக்கல்யாண ஆலயம்" என்று மக்களுக்கு அறிவித்தார். தந்தை நவமணி அடிகளார் காலத்தில் இன்னும் மாதா திருக்கல்யாணத்தாயின் புகழ் ஓங்கச்செய்தார். எனவே தான் பல இடங்களிலிருந்தும் திருமண வரம் வேண்டியும், குழந்தைபாக்கியம் வேண்டியும் மக்கள் கல்யாண அன்னையின் வளாகத்தில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.

சப்பரங்களும் சப்பரப்பறையும்:-

பண்டைய காலத்தில் இருந்தே சப்பரங்கள் எடுப்பது வழக்கமாக இருந்தது. திருக்கல்யாண மாதா ஆலயத்திலும் சப்பரங்கள், சிலுவைத் தட்டோடு புனித மிக்கேல் அதிதூதர், புனித ஞானப்பிரகாசியார், புனித இஞ்ஞாசியார், புனிதஆரோக்கிய நாதர், புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சவேரியார், புனித தோமையார், புனித சூசையப்பர், அன்னை மரியா என சப்பரங்கள் இருந்தன.

மாதாவுக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டதும் பழைய ஆலயத்தினுள் தேரை பாதுகாப்பாக வைக்க முயன்றனர் ஆனால் தேரின் உயரம் 50 அடியாக இருந்ததால் 40 அடியாக குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தேரில் உள்ள இரண்டு தட்டுகளை அகற்றிவிட்டு உயரத்தை குறைவாக்கி ஆலயத்திலேயே பாதுகாப்பாக தேர் சப்பரத்தை வைத்துக் கொண்டார்கள். காலப்போக்கில் அவற்றில் பல குறைக்கப்பட்டன. தேர் சப்பரம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் 1984ம் ஆண்டில் தந்தை லூர்து மணியின் முயற்சியால் மாதாவிற்கு 40 அடி உயரமுள்ள அலங்காரத் தேர் உருவாக்கப்பட்டது. 2008ல் அழகியதோர் சப்பரப்பறை எனப்படும் தேர் வைக்கும் இடத்தையும் கட்டினர்.

செபஸ்தியார் நாடகம்:-

திருக்கல்யாண மாதா திருவிழா நிறைவு பெற்ற மறுநாள் ஜனவரி 24ம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து புனித செபஸ்தியார் நாடகம் கர்நாடக இசை வடிவத்தில் நடைபெறும். நாடகம் நிறைவு பெற்ற பிறகு நள்ளிரவில் பங்கு பாடகர் மக்கள் அனைவரும் 'மங்களமே ஜெய மங்களமே எங்கள் மாசில்லா இயேசுவுக்கு மங்களமே'' என்ற பாடல் பாடி பங்குத்தந்தையை அழைத்துச் சென்று கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் திருவிழாவானது நிறைவிற்கு வரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 அக்டோபர் 2025, 09:23