அடைக்கல அன்னை அடைக்கல அன்னை  

அன்னை ஓர் அதிசயம் – அடைக்கல அன்னையும் வீரமாமுனிவரும்

தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்தார் வீரமாமுனிவர். உலகில் வாழ்ந்த சமய மற்றும் மொழித்தொண்டர்கள் வரிசையிலே இவ்வாறு தமக்கென ஓர் அழியாத, தனித்துவமான இடத்தைத் தேடிக் கொண்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்து அமைந்துள்ள ஊர் ஏலாக்குறிச்சி. கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள இந்த ஊரின் முந்தைய பெயர் திருக்காவலூர். தெய்வத் திருக்காவல் மிகுந்த இடம் என்ற பொருளில் இந்த பெயரை இந்த ஊருக்கு வைத்தவர் வீரமாமுனிவர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை பகுதியில் வசித்து வந்த கிறிஸ்தவர்கள் இன்னல்களுக்கு ஆளானபோது, கொள்ளிடம் ஆற்றைக் கடந்த சில கிறிஸ்தவக் குடும்பங்கள் நடுக்காட்டில் அடைக்கலமடைந்தன. 1716-ம் ஆண்டில், அந்த பகுதிக்கு வந்த வீரமாமுனிவர், அவர்களுக்காக சேவையாற்றத் தொடங்கினார். கிறிஸ்தவர்கள் அடைக்கலமடைந்த அந்த பகுதியில் மேரி மாதாவுக்கு தேவாலயம் ஒன்றைக் கட்டி, அடைக்கல அன்னை என்று பெயரிட்டார்.

ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை  ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராயர நயினார் என்பவர், ராஜப்பிளவை என்னும் தீராத நோயினால் துன்பப்பட்டார். மருத்துவ முறைகள் பயனற்றுப் போக, இறுதியாக அவர், அடைக்கல அன்னை தேவாலயத்தை நாடி வந்தார். வீரமாமுனிவர் அவருக்கு உதவ முன்வந்தார். அவரது நோய்க்கான மூலிகையைத் தேடி, வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் வீரமாமுனிவர் அலைந்தார். அன்னையின் அற்புத செயலாக, வறண்டுபோன பூமியிலிருந்து தண்ணீர் கொப்பளித்து வந்தது. வீரமாமுனிவர் அந்த தண்ணீரை சேற்றுடன் அள்ளி, மன்னரின் ராஜப்பிளவை கட்டியில் பூசி விட்டாராம். ஆச்சரியமாக, ஏழு ஆண்டுகளாக ராஜப்பிளவை நோயினால் அவதிப்பட்டு உறக்கத்தைத் தொலைத்த மன்னர், அன்றிரவு நிம்மதியாக தூங்கினார். நோயும் படிப்படியாக குணமானது.

தமக்கு ஏற்பட்ட தீராத நோயை அடைக்கல அன்னைதான் குணப்படுத்தியதாக நம்பிய மன்னர், அதற்கு நன்றியாக, வீரமாமுனிவர் எழுப்பிய அடைக்கல அன்னை தேவாலயத்திற்கு 175 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக எழுதி வைத்தார். அரசர் அளித்த இந்த காணிக்கைக்கு ஆதாராமாக கல்வெட்டு இன்றும் ஏலாக்குறிச்சியில் அடைக்கல அன்னையின் புதுமைக்கு சாட்சியாக இருந்து வருகிறது.

வீரமாமுனிவர் இந்தப் பகுதியில் தங்கி பணியாற்றியபோதுதான், திருக்காவலூர் கலம்பகம் என்ற புகழ்பெற்ற நூலை உருவாக்கினார். தமிழ் மொழியில் உள்ள கலம்பக நூல்கள், ஆண்பால் கலம்பகங்களாக உள்ளன. அதாவது, பாட்டுடைத் தலைவர் ஆண்களாகவே உள்ளனர். ஆனால், வீரமாமுனிவர் உருவாக்கிய இந்த திருக்காவலூர் கலம்பக நூல், பெண்பால் கலம்பகமாக உள்ளது. திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள அடைக்கல மாதாவை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமயம் சார்ந்த ஒரே கலம்பக நூலும் இதுமட்டுமே. திருக்காவலுரில் கோயில் கொண்டுள்ள அடைக்கல அன்னையின் அருமை பெருமைகளை இந்த செய்யுள்கள் மூலம் வீரமாமுனிவர் விளக்குகிறார்.

வீரமாமுனிவர் வரலாறு

இப்போது வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் கான்ஸ்டன்டைன் பெஸ்கியின் வாழ்வை சற்று அறிந்துகொள்வோம். இவர்  இத்தாலி  நாட்டிலுள்ள  கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர்  இத்தாலிய நாட்டு கிறிஸ்துவ மத போதகர் ஆவார்.  கிறித்தவ சமயத் தொண்டுக்காகத் தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈர்க்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவுமே மாறிவிட்டார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி மற்றும் ஏலாக்குறிச்சி, கோனான்குப்பம் முதலிய பல இடங்களில் சமயத் தொண்டு புரிந்தார். தாம் சமயப்பணி புரிந்த இடங்களிலேயே, பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார்.

தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்தார் வீரமாமுனிவர்.உலகில் வாழ்ந்த சமய மற்றும் மொழித்தொண்டர்கள் வரிசையிலே இவ்வாறு தமக்கென ஓர் அழியாத, தனித்துவமான இடத்தைத் தேடிக் கொண்டார் பெஸ்கி எனப்பட்ட வீரமாமுனிவர். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை “தைரியநாதசாமி”  என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர்  “வடமொழி” என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவிச் செந்தமிழில் “வீரமாமுனிவர்” என மாற்றிக் கொண்டார்.

1710 ஜூன் மாதம் கிறித்தவ மதப் பரப்புப் பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார். சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டு, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி மதுரையில் காமனாயக்கன் பட்டி வந்து சேர்ந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறிஸ்துவின்  வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி  என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முகாசபரூர் பாளையக்காரரின் உதவிகொண்டு புனித பெரிய நாயகி அன்னைக்கு திருத்தலம் கட்டி எழுப்பியவர் வீரமாமுனிவர். கோனான்குப்பம் புனித பெரியநாயகி அன்னைக்குத் தமிழ் கலாச்சாரப்படி அன்னை மாமரிக்குப் புடவை உடுத்தியபடி மரத்தாலான சுரூபங்களைச் செய்து அன்னையின் பெருமையும் புகழும் உலகறியச் செய்துள்ளார் வீரமாமுனிவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், ஆவூர் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னைக்கு ஆலயம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் ஆகியவற்றைக் கட்டி உள்ளார். இவர் கட்டியுள்ள அனைத்து ஆலயங்களும் ஒரே வடிவில் இருக்கிறது. இவர் கட்டி எழுப்பியுள்ள ஆலயத்திற்குல் ஐம்பது பேர் மட்டுமே அமரலாம்.

தத்தம் தாய்மொழியிலே புலவர்கள் பல்வேறு இலக்கியங்களைப் படைப்பது பொதுவழக்கு. தமது தாய்மொழி யல்லாத பிறமொழிகளை அறிஞர்கள் கற்று அதில் ஆழ்ந்த புலமை பெறுவதும் உலகில் காணக்கூடியதே. எனினும் ஒருவருக்குத் தம் தாய்மொழியல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம், அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றலும் அரும் புலமையும் அடைவது மிகமிக அரிய செயலாகும். செயற்கரிய அச்செயலைச் செய்து, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராக வீரமாமுனிவர் திகழ்கிறார்.

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி மற்றும் ஏலாக்குறிச்சி, கோனான்குப்பம் முதலிய பல இடங்களில் சமயத் தொண்டு புரிந்தார். தாம் சமயப்பணி புரிந்த இடங்களிலேயே, பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார்.

தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்தார் வீரமாமுனிவர். உலகில் வாழ்ந்த சமய மற்றும் மொழித்தொண்டர்கள் வரிசையிலே இவ்வாறு தமக்கென ஓர் அழியாத, தனித்துவமான இடத்தைத் தேடிக் கொண்டார் பெஸ்கி எனப்பட்ட வீரமாமுனிவர்.

1968-ஆம் ஆண்டில், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கான அங்கீகாரமாக, சென்னை நகரின் மெரினா கடற்கரையில், வீரமாமுனிவருக்கு தமிழ்நாடு அரசு ஒரு சிலையை அமைத்தது.

1981-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழர் பேரவை சென்னை மாநகரில் அவரது சிலையை நிறுவியது. (நன்றி : AstroVed இணையதளம்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 நவம்பர் 2025, 13:09