இறைவனிடம் இறைவேண்டல் இறைவனிடம் இறைவேண்டல்  

தடம் தந்த தகைமை : நிக்கானோரின் வீழ்ச்சி!

தம் ஊழியர்களோடு முழுமையாக நல்லுறவு கொள்ளும்படி இரக்கமுள்ள ஆண்டவரை இறைஞ்சி வேண்டினார்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாள்களில் நம்பிக்கை தரும் சொற்களால் மக்கபே தம் ஆள்களுக்கு ஊக்கமுட்டினார்; தங்கள் சட்டங்களுக்காகவும் நாட்டுக்காகவும் உயிரைக் கொடுக்க அவர்களை ஆயத்தப்படுத்தினார்; அதன்பின் தம் படையை நான்காகப் பிரித்தார்; ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவராகத் தம் சகோதரர்களான சீமோன், யோசேப்பு, யோனத்தான் ஆகியோரை ஏற்படுத்தி, ஒவ்வொரு பிரிவுக்கும் ஆயிரத்து ஐந்நூறு வீரர்களை ஒதுக்கினார்; மேலும், திருநூலிலிருந்து உரக்கப் படிக்க எலயாசரை ஏற்படுத்தினார்; “கடவுளே நமக்குத் துணை” என்று கூறிப் போர்க்குரல் எழுப்பினார். பின்னர் முதல் படைப்பிரிவைத் தாமே நடத்திச் சென்று நிக்கானோரை எதிர்த்துப் போர்தொடுத்தார். எல்லாம் வல்லவர் அவர்கள் பக்கம் நின்று போர்புரியவே, ஒன்பதாயிரத்திற்கும் மிகுதியான எதிரிகளை அவர்கள் கொன்றார்கள்; நிக்கானோரின் படையில் பெரும்பாலோரைக் காயப்படுத்தி முடமாக்கினார்கள்; பகைவர்கள் எல்லாரும் நிலைகுலைந்து ஓடச் செய்தார்கள்; தங்களை அடிமைகளாக வாங்க வந்திருந்தவர்களிடமிருந்து பணத்தைக் கைப்பற்றினார்கள். சிறிது தொலை பகைவர்களைத் துரத்திச் சென்றபின் ஏற்கெனவே நேரமாகிவிட்டதால் அவர்கள் திரும்பி வரவேண்டியதாயிற்று.

அன்று ஓய்வுநாளுக்கு முந்திய நாளாய் இருந்த காரணத்தால் நீண்ட தொலை அவர்களைத் துரத்திச்செல்லும் முயற்சியைக் கைவிட்டார்கள். எதிரிகளின் படைக்கலங்களை ஒன்றுசேர்த்துப் பொருள்களைப் பறித்துக்கொண்ட பின் ஆண்டவரைப் போற்றி நன்றி கூறி ஓய்வுநாளைக் கடைப்பிடித்தார்கள்; ஏனெனில் அவர் அந்நாள்வரை அவர்களைப் பாதுகாத்திருந்தார்; அந்நாளில் அவர்கள்மீது தம் இரக்கத்தைப் பொழியத் தொடங்கியிருந்தார். ஓய்வு நாளுக்குப்பின் கொள்ளைப் பொருள்களுள் சிலவற்றைப் போரில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் ஆதரவற்றோர்க்கும் கொடுத்தார்கள்; எஞ்சியதைத் தங்களுக்குள்ளும் தங்கள் பிள்ளைகளோடும் பகிர்ந்து கொண்டார்கள். இதன்பின் அவர்கள் பொதுவில் கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள்; தம் ஊழியர்களோடு முழுமையாக நல்லுறவு கொள்ளும்படி இரக்கமுள்ள ஆண்டவரை இறைஞ்சி வேண்டினார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 நவம்பர் 2025, 15:29