கோவை மறைமாவட்டத்தில் இளையோர் யூபிலி விழாக் கொண்டாட்டம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 9, இஞ்ஞாயிறன்று, 'புனிதம் தூரமில்லை' என்ற தலைப்பில் தமிழகத்தின் கோவை மறைமாவட்டத்தில் இளையோர் யூபிலி விழா ஒன்றைச் சிறப்பித்துள்ளனர் அம்மறைமாவட்டத்தைச் சேர்ந்த இளையோர்.
இளையோரை புனிதத்தை நோக்கியப் பயணத்தில் வழிநடத்த. நற்கருணை மீது அதீத பக்தி கொண்ட புனித கார்லோ அகுடிஸ் வழியில் நற்கருணையைக் கொண்டாடுகிற இளையோராய் வாழ இந்த யூபிலி விழா கொண்டாடப்பட்டது.
அருள்பணியாளர்கள் ரோச், மற்றும் கிறிஸ்டோபர் இருவரும் திருப்பலியின் அர்த்தங்களையும், நற்கருணை பெறுவதால் ஏற்படும் மேன்மையையும் நன்மைகளையும், இறையாசீரையும் இளையோருக்கு எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து இளையோரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில் மறைமாவட்டம் முழுவதிலுமிருந்தும் ஏறக்குறைய 420 இளையோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன. காலை நற்கருணை துதி ஆராதனையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாலை கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு. முனைவர் L. தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் தலைமையில் ஆடம்பரக் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இளையோர் பணிக்குழு செயலர். அருட்பணி.ச.ஞானப்பிரகாசம் அவர்கள் இவ்விழாவிற்கான முழு ஏற்பாட்டையும் சிறந்த முறையில் செய்திருந்தார். இந்த நிகழ்வு இளையோர் மற்றும் இறைமக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பைப் பெற்றது. இறுதியில் கோவை ஆயரின் ஆசிரோடு இந்த இளையோர் யூபிலி விழாக் கொண்டாட்டங்கள் நிறைவுபெற்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்