புனித பூமிக்குத் அனைவரும் திருப்பயணம் மேற்கொள்க!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஐ.நா. பாதுகாப்பு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட காசாவிற்கான புதிய அமெரிக்க சமாதான திட்டம், இறுதியில் ஓர் அரசியல் செயல்முறைக்கும், இரு நாடுகளின் தீர்வுக்கும் வழிவகுக்கும் என்று வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா.
இருப்பினும், இந்தத் தீர்மானத்தால் களத்தில் சிறிய மாற்றமே ஏற்படும் என்றும், காசா இன்னும் பேரழிவைச் சந்தித்து வருவதாகவும், மனிதாபிமான உதவிகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ள கர்தினால் பிட்சபாலா அவர்கள், அமெரிக்கா, அரபு நாடுகள் மற்றும் துருக்கி உட்பட அனைத்துத் தரப்பினரின் அரசியல் துணிவு இருந்தால் மட்டுமே உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் மனிதத்தன்மையற்ற முறையில் இடம்பெற்ற குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்ட போதிலும், அங்கு அன்றாட நிலை பெரிய அளவில் மாறாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால், அடிப்படைச் சேவைகள் அரிதாகவே செயல்படுவதாகவும், மீள்கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுள்ளதாகவும், மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் குளிர்காலத்தை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்பே மற்றும் ஆபூத் போன்ற பாலஸ்தீனிய கிராமங்களில் குடியேறியவர்கள் நடத்திய தாக்குதல்கள் உட்பட, மேற்கு கரையில் அதிகரித்து வரும் வன்முறையை எடுத்துரைத்த அதேவேளை, இந்தத் தாக்குதல்களால், பரவலான கையறு நிலை மற்றும் சட்டப் பாதுகாப்பின்மை நிலவுவதாகவும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் பிட்சபாலா.
பாலஸ்தீனத்திற்கான குறியீட்டு அங்கீகாரங்களைத் தாண்டி செயல்படவும், அங்கு இடம்பெறும் அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், செயலில் ஈடுபடக்கூடிய அரசியல் செயல்முறையை உருவாக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு, அனைத்துலகச் சமூகம் வலுவாகப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பிட்சபாலா.
முக்கியமான திருப்பயணத் திருத்தலங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், உள்ளூர் கிறிஸ்தவர்கள் பொருளாதாராத்தை நம்பி இருப்பதாகவும், இதன்காரணமாக, புனித பூமிக்குத் அனைவரும் திருப்பயணம் மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் கர்தினால் பிட்சபாலா.
மேலும் இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீனிய கைதிகள் மரணம் குறித்த அறிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் பகைமை உணர்வு பற்றி குறிப்பிட்ட கர்தினால், வெறுப்பு சமுதாயத்தில் ஊடுருவி விட்டதாகவும், வன்முறை சாதாரணமாகி விட்டதாகவும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக, மதங்களுக்கிடையேயான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த கர்தினால் பிட்சபாலா அவர்கள், சமூகங்களில் ஒருவரின் வலியை மற்றவர் உணரும்போதுதான் அமைதி ஏற்பட முடியும் என்று கூறி தனது நேர்காணலை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்