தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள்  

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமை வழங்கும் அசாம்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமையை வழங்கும் அசாம் அரசின் முடிவை அம்மாநில கிறிஸ்தவ அமைப்பு வரவேற்றாலும், நிலத்தை அரசிற்கு மாற்றும் அதன் நடவடிக்கைக்கு தனியார் தோட்ட உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டார்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது : யூக்கான் செய்தி

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டங்களில் தலைமுறைகளாக வசித்து வரும் தொழிலாளர்கள் சட்டபூர்வமான நில உரிமையைப் பெறுவதற்கு உறுதியளிக்கும் புதிய சட்ட திருத்தத்தை அங்குள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர் என்று யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு, நவம்பர் 28-ஆம் தேதியன்று, நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம்  60 இலட்சத்திற்கும்  மேற்பட்ட மக்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் தொழிலாளர்களில் பலர் கிறிஸ்தவர்கள் அடங்குவர் என்றும், இச்சட்டம் அங்குள்ள தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களை ஏறத்தாழ 3,30,000 தொழிலாளர் குடும்பங்களுக்குக் குடியிருப்பிற்காக ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கிறது என்றும் அச்செய்தி நிறுவனம் உரைத்துள்ளது.

இந்நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தச் சட்டத்தை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று பாராட்டியுள்ளதாகவும், மேலும் இது தொழிலாளர்களுக்கு நீண்ட கால வீட்டுக் குடியிருப்புப் பாதுகாப்பை வழங்கும் என்று குறிப்பிட்டதாகவும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமையை வழங்கும் அசாம் அரசின் முடிவை அம்மாநில கிறிஸ்தவ அமைப்பு வரவேற்றாலும், நிலத்தை அரசிற்கு மாற்றும் அதன் நடவடிக்கைக்கு தனியார் தோட்ட உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டார்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்

அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் செல்வாக்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுள்ள காரணத்தால், அடுத்த ஆண்டு அங்கு வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கிறிஸ்தவத் தலைவர்கள் அச்சம்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது அச்செய்திக் குறிப்பு. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 டிசம்பர் 2025, 13:57