உரிமைகளுக்காகப் போராடும் கிறிஸ்தவர்கள் உரிமைகளுக்காகப் போராடும் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

சத்தீஸ்கரில் மதமாற்ற எதிர்ப்புப் பேரணியால் கிறிஸ்தவர்கள் மத்தியில் அச்சம்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் வெறும் 2 விழுக்காடு மட்டுமே உள்ள போதிலும், கடந்த ஆண்டில் அங்குக் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 165 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது இந்தியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காங்கேர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னதாக மதமாற்ற எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றவேளை, இதில் சட்டவிரோதமாக இயங்கும் கிறிஸ்தவக் கோவில்கள் மற்றும் பூர்வகுடி மக்களிடையே நடைபெறும் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டதால், அம்மாநிலக்  கிறிஸ்தவர்கள் தற்போது அச்சத்திலும் பாதுகாப்பற்ற சூழலிலும் உள்ளனர் என்று யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டாயப்படுத்துதல் அல்லது தூண்டுதல் மூலம் நடக்கும் மதமாற்றங்களை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாக பேரணியில் கலந்துகொண்ட இந்துமதத் தலைவர்கள் கூறினாலும், இந்த நிகழ்வானது கிறிஸ்தவச் சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டுத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஒரு விரோதப் போக்கைப் பிரதிபலிக்கிறது என்று கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவித்துள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

குறிப்பாக பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளில் மிரட்டல்கள், உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் சமூகப் புறக்கணிப்புகள் அதிகரித்து வருகின்றன என்றும், இதில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதும், கிராமங்களிலிருந்து கிறிஸ்தவக் குடும்பங்கள் வெளியேற்றப்படுவதும் அடங்கும் எனக்  கூறும் கிறிஸ்தவ ஆர்வலர்களின் எண்ணங்களையும் அச்செய்தி நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற இந்து தேசியவாத அமைப்புகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தவறான தகவல்களையும் வெறுப்புணர்வுகளையும் தூண்டிவிடுவதாக கிறிஸ்தவ ஆர்வலர்கள் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்திக் குறிப்பு.

சத்தீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் வெறும் 2 விழுக்காடு மட்டுமே உள்ள போதிலும், கடந்த ஆண்டில் அங்குக் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 165 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது இந்தியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் வேளையில் அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 டிசம்பர் 2025, 14:57