கர்தினால் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் கர்தினால் பாப்லோ விர்ஜிலியோ டேவிட்  

பிலிப்பீன்ஸ் நலவாழ்வு உதவித் திட்டம் ஒரு பொருளாதார முறைகேடு!

இந்தத் திட்டத்தின் வரவுசெலவுத் திட்டம் ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்து, ஏறத்தாழ 87.4 கோடி அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் நாட்டு அரசால் முன்மொழியப்பட்ட அரசு நலவாழ்வு  உதவித் திட்டத்தை விமர்சித்துள்ள மூத்த கர்தினால் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் அவர்கள், இது ஆதரவு அரசியலையும் ஊழலையும் ஊக்குவிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

வரும் 2026-ஆம் ஆண்டுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள ஏழை மற்றும் நிதி வசதியற்ற நோயாளர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம் (MAIFIP) ஒரு நலவாழ்வு நிதி முறைகேடு போலச் செயல்படுவதாகவும் கர்தினால் டேவிட் கூறியுள்ளார்.

மேலும், மருத்துவ உதவியைப் பெறுவதற்கு அரசியல்வாதிகளின் பரிந்துரைக் கடிதங்களை கட்டாயமாக்குவதன் மூலம் அந்த உதவியை யார் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டம் இயற்றுபவர்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் டேவிட்.

இந்தத் திட்டம், நலவாழ்வு சேவை என்பது ஒரு அடிப்படை உரிமை என்ற நிலையிலிருந்து தடம்மாறி, அரசியல்வாதிகள் செய்யும் ஒரு கைமாறு  என்ற நிலைக்குத் தள்ளப்படுவதாகவும், இது அரசியல்வாதிகளை மக்கள் சார்ந்து இருக்கும் நிலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் விமர்சித்துள்ளார் கர்தினால் டேவிட்.

அரசால் முன்மொழியப்பட்டுள்ள இந்தத்  திட்டம், அனைவருக்குமான நலவாழ்வுப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீர்குலைப்பதாக திரு அவை தலைவர்களும் நலவாழ்வுக் கொள்கை நிபுணர்களும் கூறியுள்ளனர். குறிப்பாக, இத்திட்டத்தை திருஅவைத் தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 டிசம்பர் 2025, 15:11