யூதச் சமூகத்தின் மீதான தாக்குதல் நம் அனைவரின் மீதான தாக்குதலுக்குச் சமம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
யூதச் சமூகத்தின் மீதான தாக்குதல் நம் அனைவரின் மீதான தாக்குதலுக்குச் சமம் என்று கூறியுள்ளார் சிட்னியின் பேராயர் அந்தோணி ஃபிஷர்.
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூதச் சமூகத்தின் மீதான தாக்குதலின் துயரத்தைத் தொடர்ந்து, அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள பேராயர் ஃபிஷர் அவர்கள், ஆஸ்திரேலியக் கத்தோலிக்கச் சமூகம் கல்வி மற்றும் படிப்பினை வழியாக யூத எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதலை யூத எதிர்ப்பு வெறுப்புச் செயல் என்றும், ஆஸ்திரேலியாவின் விழுமியங்களுக்கு எதிரான ஒரு கடுமையான அவமானம் என்றும் கண்டனம் செய்துள்ள பேராயர் ஃபிஷர் அவர்கள், யூத எதிர்ப்புச் சூழல் வளர்ந்து வருவதாக எச்சரித்துடன், அதனைத் தடுப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் பொதுவான ஆன்மிக மூலங்களைக் (தோற்றுவாய்கள்) குறித்து எடுத்துக்காட்டிய பேராயர் ஃபிஷர் அவர்கள், யூதர்கள் மீதான இந்தத் தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலுக்கு சமம் என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதேவேளையில், இந்தத் துயர நிகழ்வின் போது காட்டப்பட்ட துணிவு மற்றும் இரக்கச் செயல்களை எடுத்துரைத்து, யூதச் சமூகத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார் பேராயர்.
மேலும் கத்தோலிக்கத் தலத்திருஅவை, கல்வி, படிப்பினை மற்றும் நடைமுறை ஆதரவு மூலம் யூத எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தும் என்றும் உறுதியளித்தார் பேராயர்.
இதற்கிடையில் போண்டி கடற்கரையில் உள்ள பங்குத்தளத்தின் அருள்பணியாளர் அந்தோணி ராபி அவர்கள், வத்திக்கான் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, இந்த நிகழ்வு குறிப்பாக, இளைஞர்களிடையே பரவலான பயம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விவரித்தார்.
மேலும் ஆஸ்திரேலியக் கத்தோலிக்கத் தலத்திருஅவைகள் தொடர்ந்து திருப்பலி மற்றும் இறைவேண்டலில் ஈடுபட்டு திறந்த மனப்பான்மையுடன் ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் அருள்பணியாளர் ராபி.
டிசம்பர் 14, ஞாயிறன்று, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது யூதச் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு கொடிய தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர், இது உள்ளூர் சமூகத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்