கர்தினால் பல்தசாரே ரெய்னா கர்தினால் பல்தசாரே ரெய்னா  (Vatican Media)

ஆன்மிகப் புதுப்பித்தல் மற்றும் ஒன்றிப்புக்கு கர்தினால் அழைப்பு!

ஒன்றிப்பு என்பது மற்றொரு முக்கிய அம்சமாக இருக்கின்றது என்றும், இது அதிகமான மக்களைச் சென்றடைய பங்குத் தளங்கள் அதிகமாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது உரையில் கேட்டுக்கொண்டார் உரோமை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் கர்தினால் பல்தசாரே ரெய்னா.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

"தவக்காலத்தை வெறும் ஒறுத்தலுக்கான காலமாக மட்டும் பார்க்காமல் அதனை ஒரு வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருத வேண்டும்" என்று வலியுறுத்தினார் உரோமை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் கர்தினால் பல்தசாரே ரெய்னா.

தங்களின் தவக்காலப் பயணத்தைத் தொடங்கியுள்ள அருள்பணியாளர்களிடையே உரையாற்றியபோது இவ்வாறு கூறிய கர்தினால் ரெய்னா அவர்கள், அருள்பணியாளர்களின் ஆன்மிகப் புதுப்பித்தலுக்கும்  ஒன்றிப்புக்கும் அழைப்பு விடுத்தார்.

சமாரியப் பெண்ணிடம் இயேசு கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்த கர்தினால், புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் உள்ள "உன்னிலுள்ள கடவுளின் கொடையை மீண்டும் சுடர்விடச் செய்"  (2 திமொ 1:6) என்ற இறைவார்த்தையை அருள்பணியாளர்களுக்கு நினைவூட்டியதுடன்,அவர்கள் தங்கள் பணிகளில் புதிய உத்வேகத்துடன் செயல்படவும், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து பணியாற்றவும் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

அருள்பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணிகளைப் பாராட்டிய கர்தினால் ரெய்னா அவர்கள், மாறிவரும் கலாச்சாரச் சூழல்களுக்கு ஏற்ப, குறிப்பாக நற்செய்தி அறிவிப்பு மற்றும் கிறிஸ்தவப் புகுநிலைப் பயிற்சிகளில் புதிய மேய்ப்புப் பணி அணுகுமுறைகள் தேவை என்பதை எடுத்துக்காட்டினார்.

ஒன்றிப்பு என்பது மற்றொரு முக்கிய அம்சமாக  இருக்கின்றது என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டிய கர்தினால், இது அதிகமான மக்களைச் சென்றடைய பங்குத் தளங்கள் அதிகமாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் திருஅவையிலிருந்து விலகி இருப்பதாக உணரும் இளைய தலைமுறையினரிடம் அதிகக் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு அவர்களை அறிவுறுத்தினார் கர்தினால் ரெடினா.

இறுதியாக, ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதன் அவசியத்தையும், தங்களின் இறைப்பணியில் தொடர்ந்து புத்துணர்ச்சி பெறவேண்டியதன் தேவையயையும் வலியுறுத்திய கர்தினால் ரெய்னா அவர்கள், "கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப, முழு மனதுடன் உரோமை நகருக்குப்  பணியாற்ற வேண்டும்" என்று  விண்ணப்பித்து தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 பிப்ரவரி 2026, 12:42