தடம் தந்த தகைமை : மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால்....
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக் 12:15)
ஏராளமான சொத்தும், பணமும், பட்டங்களும், பதவியும் இருந்தால் அவர் கடவுளின் ஆசி பெற்றவர் என்ற கருத்தியல் யூதச் சமூகத்தில் கரைபுரண்டோடியது. எனவே மேற்குறிப்பிட்டவற்றைத் தேடி ஓடும் உத்வேகம் மறைமுகமாகத் திணிக்கப்பட்டது. இதனால் யாரைப் பிடித்தேனும் எதைச் செய்தேனும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை அடிமட்ட மக்களிடமும் இருந்தது. அவ்வாறு 'ஆஹா ஓஹோ' என வாழ்ந்தால்தான் கடவுளும் கண்டுகொள்வார் என்ற அறியாமையும் அங்கே அபாரமாக இருந்தது.
செல்வம் தேடி அலைந்த சமூகத்தை நோக்கி எளிமை தேடச் சொன்னார் இயேசு. செல்வம் இருந்தால்தான் சொர்க்கம் செல்லலாம் என்ற சித்தாந்தத்தைச் சிதறடிக்கச் சொன்னவரும் அவரே. கடவுள் செல்வத்தை உயர்வாகக் கருதியிருந்தால் அதைச் செருக்குமிக்கவர்களுக்குக் கொடுத்திருக்க மாட்டார்தானே. ஒன்றை நினைவில் கொள்வோம். செல்வம் அளவாய் இருந்தால் நம்மைத் தூக்கிச் சுமக்கும். அதிகமானால் நாம்தான் அதைத் தூக்கிச் சுமக்க வேண்டி வரும். ஆனால் இறுதியில்...?
இறைவா! ஒப்பற்ற செல்வமாம் உம்மையே பற்றி எளிமையாய் வாழ வழிகாட்டும்.
"உம் வாக்கின் வழியிலே" என்னும் நூலிலிருந்து அருள்பணி பெனெடிக் M.D. ஆனலின்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்