பாகிஸ்தான் இரமலான் நிவாரணத் திட்டத்தில் கிறிஸ்தவர்கள்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் பஞ்சாப் அரசு செயல்படுத்தி வரும் இரமலான் நிவாரணத் திட்டத்தில், முதல் முறையாகக் கிறிஸ்தவச் சமூகத்தினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
நிகாபான் இரமலான் (Nigahban Ramadan) திட்டத்தின் மூலம் புனித மாதத்தில் ஏறக்குறைய 42 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் உஸ்மா ஜாஹித் புகாரி அவர்கள், பிப்ரவரி 18, புதனன்று, இலாகூரில் அறிவித்தார்.
இந்த ஆண்டு இரமலான் மாதமும், கிறிஸ்தவர்களின் தவக்காலமும் ஒரே நேரத்தில் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அம்மாநிலத்தின் முதலமைச்சர் மரியம் நவாஸ் அவர்கள், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரொக்க உதவி 3,000 முதல் 10,000 பாகிஸ்தானிய ரூபாயாக (ஏறக்குறைய 11 முதல் 36 அமெரிக்க டாலர்) உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இத்தொகை நிதி டிஜிட்டல் வங்கி வழிகள் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த அறிவிப்பானது சமூக ஒருமைப்பாட்டிற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் எடுக்கப்பட்ட நல்லதொரு முயற்சி எனக் கிறிஸ்தவத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ள அதேவேளை, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறப்போகும் கிறிஸ்தவக் குடும்பங்களின் எண்ணிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் ஏறக்குறைய 1.37 விழுக்காடு உள்ளனர். அரசுத் தரவுகளின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 29 விழுக்காடு பேர் அதாவது ஏறத்தாழ 7 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்