பிலிப்பீன்ஸில் ஒன்றிணையும் இரு புனித காலங்கள்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
இந்த 2026 ஆம் ஆண்டு, தவக்காலமும் மற்றும் இரம்ஜான் காலமும் பிப்ரவரி 18, புதனன்று, ஒரே நேரத்தில் தொடங்குவது, பிலிப்பீன்ஸில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாகும் என்று கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் மதங்களுக்கு இடையிலான உரையாடல் பணிக்குழுவின் தலைவரும், கிடாபாவன் (Kidapawan) மறைமாவட்டத்தின் ஆயருமான ஜோஸ் கொலின் மெண்டோசா பகாஃபோரோ அவர்கள் கூறினார்.
இரு சமூகத்தினருக்கும் விடுத்துள்ள செய்தியொன்றில், ஒருவருக்கொருவர் மீதான மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஆயர் பகாஃபோரோ அவர்கள், "அரசியல் அல்லது நிலத் தகராறுகள் காரணமாக அவ்வப்போது அங்கு பதற்றங்கள் ஏற்பட்டாலும், கடந்த இருபது ஆண்டுகளாக பிலிப்பீன்ஸ் மக்கள் இணக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்" என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், "தவக்காலம் மற்றும் இரம்ஜான் ஆகிய இரண்டும் இறைவேண்டல் , நோன்பு, மனந்திரும்புதல் மற்றும் தாராள மனப்பான்மைக்கான காலங்களாகும்" என்று கூறிய ஆயர் பகாஃபோரோ அவர்கள், "இது விசுவாசிகளை ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாகப் பார்க்க ஊக்குவிக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.
திருவிவிலியம் மற்றும் திருக்குர்ஆன் ஆகிய இரண்டிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசிய ஆயர் பகாஃபோரோ அவர்கள், விசுவாசிகள் அமைதியைச் செயலில் காட்டவும், விசுவாசத்தின் மூலம் தங்கள் இதயங்களை மாற்றியமைக்கவும், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் மீது இரக்கம் காட்டவும் வலியுறுத்தினார்.
பிலிப்பீன்ஸ் நாட்டில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவையினால் முன்னெடுக்கப்படும் அதாவது மற்றவர்களுடனான ஒன்றிப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான பிறரன்புப் பணியான அலே கப்புவா (Alay Kapwa) போன்ற உள்ளூர் மரபுகளை மேற்கோள் காட்டி பேசிய ஆயர் பாகாஃபோரோ அவர்கள், "உரையாடல், ஒருவருக்கொருவர்மீதான மரியாதை மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றின் மூலமே அமைதி வளர்க்கப்படுகிறது" என்று எடுத்துக்காட்டினார்.
"இந்தக் கூட்டு அனுசரிப்பு (shared observance), சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் வழியாக வெளிப்படுத்தப்படும் ஒரு வாழும் இறைவேண்டலாக மாற வேண்டும்" என்று அழைப்பு விடுத்து தனது உரையை நிறைவு செய்தார் ஆயர் பாகாஃபோரோ.
12 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பிலிப்பீன்ஸில், பெரும்பாலும் 90 விழுக்காடு கத்தோலிக்கர்கள் இருப்பினும், அங்கு ஏறத்தாழ 70 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்கள் முக்கியமாக மிண்டானாவோ (Mindanao) பகுதியில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்