அமைதி வேண்டி இறைவேண்டல் செய்யும் இலங்கை கிறிஸ்தவர்கள் அமைதி வேண்டி இறைவேண்டல் செய்யும் இலங்கை கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு இலங்கை தலத்திருஅவை எதிர்ப்பு!

இச்சட்டம் முறையான ஆலோசனைகளுக்குப் பின்னரே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாகப் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கோரியுள்ளது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

அடிப்படைச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகக் கூறி, முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் வட இலங்கையின் யாழ்ப்பாண மறைமாவட்டத் தலத்திருஅவைத் தலைவர்கள் குடிமைச் சமூகக் குழுக்களுடன் இணைந்துள்ளனர்.

பிப்ரவரி 16, திங்களன்று, சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ள, அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PSTA) எனும் சட்டத்திற்கு எதிராக, தலத்திருஅவை தலைவர்கள் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாண ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கையெழுத்திடும் நிகழ்வில் கத்தோலிக்க மற்றும் இந்து மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

2009-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்தது முதல் தமிழ் சிறுபான்மையினரை அதிகளவில் பாதித்துள்ள, விசாரணையின்றி நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பது போன்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) அதே கடுமையான பிரிவுகள் இந்தப் புதிய சட்டத்திலும் (PSTA) தொடரக்கூடும் என்று யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதன்மைக்குரு அருள்பணி பி.ஜே. ஜெபரத்தினம் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம், 'பயங்கரவாதம்' என்பதற்கான வரையறையை விரிவுபடுத்துவதோடு, ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிப்பதாக விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தச் சட்டம் அனைத்துலகச் சட்டத்தின் செயல்பாடுகளுக்குக் கட்டுப்படவில்லை என்று ஐநா நிபுணர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சட்டம் முறையான ஆலோசனைகளுக்குப் பின்னரே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாகப் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கோரியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 பிப்ரவரி 2026, 11:27