இறைவேண்டல் செய்யும் மக்கள் இறைவேண்டல் செய்யும் மக்கள்   (AFP or licensors)

புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்

இலாகூர் உயர் மறைமாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் அறுபது பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் பலர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

இலாகூர் உயர் மறைமாவட்டத்தில் உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டங்களின்போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவம், அங்குள்ள கத்தோலிக்க மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 5, ஞாயிறன்று, பஞ்சாப் மாநிலத்தின் குஜ்ரன்வாலாவில் கிளாஸ்கே (Klasske)  நகரில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இறைமக்கள் பங்கேற்ற அதிகாலை உயிர்ப்பு பெருவிழா பவனி  திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டது  என்றும், அதிவேகமாக வந்த லாரி ஒன்று அந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தியது என்றும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் அறுபது பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்களில் பலர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டுநர் தப்பி ஓடியதைத் தொடர்ந்து, இது ஒரு விபத்து அல்ல, மாறாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்"  என்று இந்த தாக்குதலை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை மத சகிப்புத்தன்மையற்ற தன்மையை வெளிப்படுத்தும் ஒரு குற்றவியல் வன்முறை என்று கண்டித்துள்ள பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமூகத் தொடர்பு ஆணையத்தின் நிர்வாகச் செயலாளரான அருள்பணி கைசர் பெரோஸ் அவர்கள், இது குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்நிகழ்வை ஒரு வெறுப்புணர்ச்சியால் நிகழ்த்தப்பட்ட குற்றமென சுட்டிக்காட்டியுள்ள அருள்பணி லாசர் அஸ்லம், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், இந்த விவகாரத்தில் மௌனம் காக்கும் அரசு அதிகாரிகளின் போக்கை கடுமையாகச் சாடியுள்ளார்.

கத்தோலிக்க சமூகம் காயமடைந்தவர்களுக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதோடு நீதி,அமைதி, உண்மை மற்றும் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஏப்ரல் 2026, 15:57