வியானா மறைமாவட்ட ஆயர் எமிலியோ சும்பெலேலோ வியானா மறைமாவட்ட ஆயர் எமிலியோ சும்பெலேலோ 

அமைதியின் தூதராக அங்கோலா வரும் திருத்தந்தை!

இறைவேண்டல், மறைக்கல்வி மற்றும் சமூகக் கூட்டங்கள் வழியாகத் தங்களைத் தயாரிப்பதன் மூலம், திருத்தந்தையின் செய்தி தற்போதைய சமூக சவால்களுக்கு மத்தியில் மனமாற்றத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஆப்பிரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள  அங்கோலாவிற்குத் திருத்தந்தை வருகை தரவிருப்பதை, ஒரு மகத்தான அருளாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுவதாக வியானா மறைமாவட்ட ஆயர் எமிலியோ சும்பெலேலோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமைதியின் தூதராக வரும் திருத்தந்தை, அங்கோலா மக்களின் நம்பிக்கையை  உறுதிப்படுத்துவார் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

1489-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் அங்கோலாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவ வேர்களை எடுத்துக்காட்டிய ஆயர் சும்பெலேலோ அவர்கள், மேலும், திருஅவைக்கான முதல் ஆப்பிரிக்கத் தூதரான அந்தோனியோ மானுவல் நசாகா நே வுண்டா போன்ற முக்கிய ஆளுமைகளையும் கோடிட்டுக்காட்டினார்.

மேலும் வியானா (Viana) மறைமாவட்டத்தில் உள்ள நாற்பது இலட்சம் கத்தோலிக்கர்களை வழிநடத்தும் ஆயர் சும்பெலேலோ அவர்கள்,  திருத்தந்தையின் வருகைக்காக இறைமக்கள் தங்களை ஆன்மீக ரீதியில் தயார்படுத்திக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

இறைவேண்டல், மறைக்கல்வி மற்றும் சமூகக் கூட்டங்கள் வழியாகத் தங்களைத் தயாரிப்பதன் மூலம், திருத்தந்தையின் செய்தி தற்போதைய சமூக சவால்களுக்கு மத்தியில் மனமாற்றத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

நற்செய்தி அறிவிப்பின் ஆன்மீக மையங்களாகக் கருதப்படும் சாவோ ஜோஸ் டி கலும்போ (São José de Calumbo) மற்றும் நோசா சென்ஹோரா டா முக்ஸிமா (Nossa Senhora da Muxima) ஆகிய மரியன்னை திருத்தலங்களுக்கு திருத்தந்தை செல்வார் என்று ஆயர் சும்பெலேலோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் ஆன்மீக ஊக்கத்தை அளிக்கவும் திருத்தந்தை மேற்கொள்ளும் இந்தப் பயணம் சிறப்பாக அமைவதற்காக, கத்தோலிக்க திருஅவையும் அங்கோலா அரசும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஏப்ரல் 2026, 15:50