விவிலியத் தேடல்
அருள்பணி. A. கிறிஸ்டோபர்
திருப்பாடல் 98 : 1 - 4
உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
இந்த உலகத்தில் நல்லவர்களாக இருக்கிறவர்கள் வல்லவர்களாக இருப்பதில்லை. வல்லவர்களாக இருக்கிறவர்கள் நல்லவர்களாக இருக்கிறதே இல்லை. நல்லவர்களாகவும் இருந்து வல்லவர்களாகவும் இருந்தால் அவர்களால் பல ஆயிரம் ஆயிரம் அற்புதங்களைச் செய்ய முடியும். வல்லவர்களாக இருந்து அவர்கள் நல்லவர்களாவும் இருந்தால் அற்புதங்கள் பல செய்ய முடியும். ஆனால் இந்த உலகத்தில் வல்லவர்களாக இருக்கிறவர்கள் நல்ல மனதோடு பிறருக்கு உதவ வேண்டும், பிறரை முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை. தானும் தன்னுடைய குடும்பமும் வளர வேண்டும் என்றுதான் தன்னுடைய வல்லமையை பயன்படுத்தி இருக்கிறார்கள். நல்லவர்களாக இருக்கிறவர்கள் வல்லவர்களாக இருக்க மறந்து போய்விடுகிறார்கள். நல்லவர்களாக மட்டும் இருந்தால் போதும் என்ற நினைப்பில் அவர்கள் தங்களுடைய வல்லமைகளை, திறமைகளை வளர்த்துக் கொள்வதே இல்லை.
அன்புக்குரியவர்களே! இன்றைய திருப்பாடலானது ஆண்டவர் எப்படி வல்லவராக இருக்கிறார், அதே சமயத்திலே அந்த வல்லவர் எப்படி நல்லவராய் இருக்கிறார் என்று நமக்கு படம் பிடித்து காட்டுகிறது திருப்பாடல் 98:1 நமக்கு இப்படி சொல்லுகிறது. ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள், ஏனெனில் அவர் வியத்தகு செயல்களை புரிந்திருக்கிறார். எதற்காக புதிய பாடல் பாட வேண்டும்? அப்படி என்ன வியத்தகு செயல்களை செய்தார்? அப்படி என்று சொன்னால் தொடர்ந்து திருப்பாடல் ஆசிரியர் நமக்கு சொல்லுகிறார். அவரது வலக்கை வெற்றியை கொணர்ந்தது. அவரது புனித மிகு புயம், அவருக்கு மீட்பு தந்தது என்று சொல்லுகிறார். ஆக பல கரம் என்பது வல்லமையை குறிக்கிறது. அந்த வல்லமை வெற்றியை தருகிற வல்லமை. ஆனால் அதே சமயத்திலே அந்த வல்லமை கெட்ட வழியில் வரவில்லை. புனிதமிகு புயத்தால் வருகிறது.
எனவே, அன்புக்குரியவர்களே! இன்றைய திருப்பாடல் நமக்கு தருகிற முதல் செய்தி இதுதான். நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்லவர்களாக ஒழுக வேண்டும். ஆனால் அதே சமயத்திலே நாம் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். வல்லவர்களாக இருந்தால் நாம் நல்லவர்களாகவும் இருக்கிறோமா என்று யோசிக்க வேண்டும் என்று திருப்பாடல் நம்மை அழைக்கிறது. இந்தத் திருப்பாடலின் இரண்டாவது மூன்றாவது வசனங்கள் இன்னொரு முக்கியத்துவத்தை நமக்கு மிகத் தெளிவாக சொல்லுகிறது. இந்த உலகத்திற்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும். நீதி இருக்கிற இடத்திலே பல சமயங்களில் உண்மை இருப்ப தில்லை. நீதி இருக்கிற இடத்திலே எப்போதும் பேரன்பு இருப்பதில்லை. நீதி அன்புக்கு எதிராய் இருக்கிறது. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு நீதி இல்லாமல் போகிறது. இன்றைய திருப்பாடலினுடைய இரண்டாவது மூன்றாவது வசனங்கள் ஆண்டவர் நீதியை கொணர்கிறார், அதே சமயத்திலே ஆண்டவர் பேரன்பையும் உண்மையையும் நினைவு கூறுகிறார் என்று நமக்கு சொல்கின்றது.
அன்புக்குரியவர்களே! நீதி நிச்சயமாக வேண்டும் அந்த நீதி நிலைநாட்டப்படுகிற போது அங்கு உண்மையும், பேரன்பும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதன்படி வாழ திருப்பாடல் நம்மை அழைக்கிறது. நம் வாழ்க்கையில் சிந்தித்து பார்ப்போம். எங்கு நீதி நிலைநாட்டப்பட்டதோ அங்கு அன்புக்கு எதிராய் நிறைய செயல்கள் செயல்பட்டிருக்கின்றன. ஆனால் நீதி நிலை நாட்டப்படுகிற போது பேரன்பும், எங்கெல்லாம் அன்பும் உண்மையும் இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியும் இருக்க வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் நமக்கு அழைப்பு கொடுக்கிறார். நாம் அன்பை விதைப்போம். நீதிக்காக போராடுவோம் உண்மைக்காக வாழ்ந்து காட்டுவோம். இந்த வருடம் நமக்கு நீதியை தரட்டும். நேர்மையை தரட்டும். நேர்மையையும் நீதியையும் கொண்ட நல்ல தலைவர்களை நமக்கு இந்த உலகம் தரட்டும். இந்த இடத்திலே நம் ஆண்டவர் வியத்தகு செயல்களை செய்து கொண்டே இருக்கிறார்। குறிப்பாக இந்த வருடம் முழுவதும் வியத்தகு செயல்கள் பலவற்றை ஆண்டவர் செய்ய இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிப்போம்.
செபம்:
ஆண்டவரே எங்களை ஆசீர்வதியும்! வியத்தகு வியத்தகு காரியங்களை எங்களுடைய வாழ்க்கையிலே நீர் செய்து காட்டுவீராக. வல்லவர்களாய் நல்லவர்களாய் வாழவும், நீதியை நிலை நாட்டுகிற, உண்மைக்காக போராடுகிற, பேரன்பை நிலைநாட்டுகிற கிறிஸ்தவ மக்களாய் நாங்கள் வாழ எங்களுக்கு ஆசீரைத் தாரும்! எங்களை விட்டு ஒருபோதும் நீர் பிரிந்து சென்று விடாதேயும். எங்களை ஆசீர்வதித்து உம்முடைய சிறகுகளுக்கு அடியிலே எங்களை பொதிந்து பாதுகாத்து வழிநடத்த வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்