கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

சீறிப் பறக்க சிறகுகள் தேவையில்லை , சிறப்பான லட்சியம் ஒன்று இருந்தால் போதும்.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

அடர்ந்த காட்டில் மூன்று மரங்கள் தங்கள் கனவுகளை பகிர்ந்து கொண்டன. நான் மதிப்பு மிக்க நகைப்பெட்டி ஆவேன் என்று முதல் மரம் சொன்னது. நான் அரசனை சுமக்கும் பல்லாக்காவேன்  என்று இரண்டாம் மரம் சொன்னது.  நான் வான் உயர வளர்ந்து விண்ணை தொடுபவன் ஆவேன் என்று மூன்றாம் மரம் சொன்னது. இதனைக் கேட்ட இரண்டு மரங்களும் கேலி செய்தன. இந்த மரத்துக்கு ஆசையை பாரு விண்ணை தொடுமாம் விண்ணை இது நிறைவேறாத ஆசை என்றது. கேட்ட மூன்றாம் மரம் முறைப்படுத்தி,  இது ஆசை இல்லை நண்பா லட்சியம் ஆசை நிறைவேறாமல் போகலாம் லட்சியம் அது ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும் என்று சொன்னது.

ஒரு நாள் மூன்று மரங்களும் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டன.  முதல் இரண்டு மரங்களை தச்சர்கள் உடனே தேர்ந்தெடுத்து  வேலையை ஆரம்பித்தார்கள். அவர்கள் கைகளிலே நகை பெட்டியாக விரும்பிய மரம் சவப்பெட்டியானது .பல்லாக்காக விரும்பிய மரம் மாட்டு தீவனத் தொட்டியானது. விண்ணை தொட விரும்பிய மூன்றாம் மரமோ நெடுநாளாய் அந்தோ பரிதாபமாய் அங்கேயே அனாதையாய் கிடந்தது. ஆனால் விடியல் ஒரு நாள் வரும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தது.  வரவேண்டிய அந்த விடியல் வந்தது.  ஒரு நாள் தச்சர் வந்தார். அந்த மரத்தை தேர்ந்தெடுத்து செதுக்க ஆரம்பித்தார். நுணுக்கமாக மிக நுணுக்கமாக செதுக்கி செதுக்கி செம்மையான பொருள் ஆக்கினார். அந்தப் பொருள்தான் சிலுவை. அந்த சிலுவை தான் பாடுகளின் பாதையிலே இயேசு சுமந்த சிலுவையானது, புண்ணிய சிலுவையானது. உலக வரலாற்றில் இடம் பிடித்தது. கேள்விப்பட்ட சவப்பெட்டி தீவனத் தொட்டிக்கு உடனே ஆச்சரிய தகவலை அனுப்பி வைத்தது. விண்ணைத் தொட விரும்பிய அந்த மரம் விண்ணவனையே தொட்டுவிட்டது. எதுவாக ஆசிக்கிறாயோ அதுவாகவே நீ மாறிடுவாய். முனைப்பில்லா வாழ்க்கையும் முள் இல்லா கடிகாரமும் வெவ்வேறல்ல நண்பா,  சீறிப் பறக்க சிறகுகள் தேவையில்லை சிறப்பான லட்சியம் ஒன்றே இருந்தால் போதும்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஏப்ரல் 2026, 16:26