அன்னை ஓர் அதிசயம் அன்னை ஓர் அதிசயம் 

அன்னை ஓர் அதிசயம்

அன்னை மரியா, தன்னலமற்ற அன்பும் பரிந்துரையும் மூலம் இறைவனின் மீட்புத் திட்டத்தில் முக்கிய இடம் பெற்ற தாயாகத் திகழ்கிறார். கானாவூரிலிருந்து கல்வாரிவரை மனிதகுலத்தை அரவணைத்த அவர், இன்றும் அன்பின் ஊற்றாக மக்களை வழிநடத்துகிறார்.

டேனிகா அமிஷ் - வத்திக்கான்

அன்னையின் மடியில், அன்பின் ஊற்றே மரியே! அன்பிற்கினியவர்களே, அன்னை மரியாவைப் பற்றிய வாராந்திரத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற உரையில், அன்னை மரியா எவ்வாறு இறைவனால் முன்குறிக்கப்பட்டார் என்பதையும், அவரது 'ஆம்' என்ற கீழ்ப்படிதல் உலகிற்கு எத்தகைய ஒளியைத் தந்தது என்பதையும் தியானித்தோம். இன்று, 'அன்பின் ஊற்று' எனப் போற்றப்படும் அன்னையின் வாழ்வில் நிகழ்ந்த உன்னதமான பரிந்துரைகளையும், அவரது சொல்லற்கரியத் தாயன்பு மாந்தரை எங்ஙனம் காக்கிறது என்பதையும் விரிவாகக் காணவிருக்கிறோம். அம்மா என்றால் அன்பு, அது தன்னலம் கருதாதத் தூய அன்பாகும் என நூல் கூறுகிறது. அன்னையர்க்கெல்லாம் அன்னையாம் மரியா, இறைவனின் மீட்புத் திட்டத்தின் மிக முக்கியக் கருவியாகத் திகழ்ந்தவர். மானுடம் வீழ்ந்தபோது அதைத் தூக்கியெடுக்கத் தம் மகனை அனுப்பத் திருவுளம் கொண்டார் இறைவன். அந்தத் தெய்வீகத் திட்டம் மரியா என்னும் பெண் வாயிலாகவே நிகழ வேண்டும் என முன்குறிக்கப்பட்டது. இவரைப் பற்றிய இறைவாக்கு, இவரது பிறப்பிற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டது.

காலம் கனிந்தபோது நாசரேத்தூர் மரியாவுக்கு வானதூதர் வழியாக இறைச் செய்தி அறிவிக்கப்பட்டது. "இதோ உமது அடிமை" என்று மரியா தன்னை முழுமையாகக் கையளிக்க அன்பே காரணமாக இருந்தது. அக்காலத்தில் மெசியா பிறப்பார் என்ற எதிர்பார்ப்பு யூதப் பெண்களிடையே மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. கன்னியாக இருந்த நிலையில் தூய ஆவியின் வல்லமையால் கருத்தாங்க மரியா துணிச்சலுடன் சம்மதித்தார். மரியாவின் இந்தச் சம்மதம் அவர் மானிடர் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது. மரியா வாழ்ந்த யூதச் சமுதாயம் ஆணாதிக்கம் மிக்கதாகவும் பெண்கள் மதிக்கப்படாதச் சூழலையும் கொண்டிருந்தது. திருமணமாகாமல் ஒரு பெண் கருவுறுவது அக்காலத்தில் அவமானத்திற்கும் கடுமையானத் தண்டனைக்கும் உரியக் குற்றமாகும். மரியாவும் யோசேப்பும் எத்தகைய விமர்சனங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எத்தனை வாள்கள் அவர் மனதை ஊடுருவிப் பாய்ந்திருந்தாலும், அவர் மீட்புத் திட்டத்திற்காகப் புரட்சிப்பண் இசைத்தார். மானுட மீட்பில் அவருக்கிருந்த அக்கறையே அத்தனைச் சவால்களையும் தாங்கும் வலிமையை அவருக்குத் தந்தது.

வானதூதர் மரியாவிடம் செய்தி சொன்னபோது, முதிர்வயதில் கருத்தாங்கிய எலிசபெத்தைப் பற்றியும் கூறிச் சென்றார். தன்னலமற்ற மரியா, தனது உடல் மற்றும் மனச்சோர்வுகளை மறந்து உறவினருக்கு உதவ விரைந்து ஓடினார். எலிசபெத்தோ அல்லது உறவினர்களோ உதவி கோரி மரியாவை அழைக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆயினும் மூன்று மாதங்கள் தங்கியிருந்து எலிசபெத்திற்குத் தேவையான அனைத்துப் பணிவிடைகளையும் மரியா அன்புடன் புரிந்தார். இது மரியாவின் ஆளுமையில் பொதிந்துள்ள 'அன்பு' என்னும் பண்பைப் படம்பிடித்துக் காட்டும் நிகழ்வாகும். மரியாவின் அன்புச் செயலுக்கு மற்றுமொரு சிறந்த உதாரணமாகக் கானாவூர் திருமண நிகழ்வு அமைகிறது. அத்திருமண வீட்டில் மரியா இருந்தார் என்று நற்செய்தி குறிப்பிடுவது அவர் நெருங்கிய உறவினர் என்பதை உணர்த்துகிறது. விருந்தினர்களை உபசரிக்கும் பொறுப்பில் மரியா இருந்ததால், அங்கே இரசம் தீர்ந்துவிட்ட குறையை அவர் கண்டறிந்தார். மணவீட்டார் யாரிடமும் உதவி கேட்காத நிலையிலும், அவர்களின் துன்பம் கண்டு மரியாவின் தாயுள்ளம் தவித்தது. அந்தத் துன்பத்தைத் துடைக்கத் தனது மகனால் மட்டுமே முடியும் என்று மரியா தீர்க்கமாக நம்பினார்.

மகனிடம் சென்று நிலையை விவரித்தபோது, இயேசு "காலம் இன்னும் வரவில்லை" எனப் பதில் அளித்தார். ஆயினும் தாயின் அன்புக் கட்டளையை மீற முடியாமல், இயேசு தனது முதல் அருங்குறியைச் செய்ய முன்வந்தார். பணியாளர்களிடம் "அவர் சொல்வதைச் செய்யுங்கள்" என்று கூறித் தயார் நிலையில் அவர்களை மரியா வைத்தார். தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதன் மூலம் இயேசுவின் இறைவல்லமை முதன்முறையாக அங்கே வெளிப்பட்டது. அன்னையின் பரிந்துரையால் கவலைகள் மறைந்து, திருமண வீட்டில் மகிழ்ச்சி மீண்டும் பெருக்கெடுத்து ஓடியது. கானாவூர் புதுமை நமக்கு உழைப்பின் அவசியத்தையும் மனித ஒத்துழைப்பின் தேவையையும் ஒரு பாடமாகக் கற்பிக்கிறது. இயேசு தண்ணீரை நிரப்பச் சொன்னபோது பணியாளர்கள் செய்த ஒத்துழைப்பே அற்புதம் நிகழக் காரணமாக அமைந்தது. உழைப்பின்றி ஆன்மீக ஒளி இல்லை என்றும், படிப்பு என்னும் தண்ணீரின்றி அறிவு கிட்டாது என்றும் கூறப்படுகிறது. தூய ஆவி அறிவைத் தருவதற்கு மனித உழைப்பும் முயற்சியும் மிக இன்றியமையாதது எனத் தூயோர் கற்பித்தனர். மரியாவின் பரிந்துரை ஆபத்துகளிலிருந்து விடுவிக்கும் என்பதற்கு இக்கதை ஒரு சிறந்தச் சான்றாக விளங்குகிறது.

மரியாவின் அன்பிற்கு மற்றுமொரு சாட்சியாக விளங்குவது அவர் கல்வாரி வரை மகனைத் தொடர்ந்த நிகழ்வாகும். இயேசுவின் சீடர்களே அச்சமுற்று ஓடிவிட்ட நிலையில், மரியா மட்டும் வீரப் பெண்மணியாகச் சிலுவையடியில் நின்றார். மகனின் வேதனைக் கதறலோடு அன்னையின் இதயத் துடிப்பும் கலந்து ஒரு மகா பெரியத் தியாகமானது. சிலுவையடியில் நின்ற மரியா, மாந்தர் அனைவரையும் தனது மக்களாக ஏற்றுக்கொண்டது அவரது அன்பின் உச்சமாகும். தன் மகனை இழந்தப் போதும் உலக மக்களைப் பிள்ளைகளாக ஏற்ற அன்னை மரியா அன்பின் ஊற்றாகிறார். விண்ணகத்திலிருந்துக் கொண்டு அன்னை மரியா இன்றும் அண்டிவரும் மாந்தரை அரவணைத்துத் தேற்றி வருகிறார். தன்னை நோக்கித் துயரத்தோடுக் கதறுவோருக்கு "மகனே நான் இருக்கிறேன்" என்று அவர் குரல் கொடுக்கிறார். பிள்ளை அழுக்காகவோ அல்லது ஊனமாகவோ இருந்தாலும், தாய் அவர்களை அப்படியே ஏற்று அன்பு செய்கிறார். தன் மகனிடம் நமக்காக ஓயாதுப் பரிந்துரைக்கும் அன்னையின் அன்பு ஊற்று என்றும் வற்றாத அமுத ஊற்றாகும். அவ்வூற்றிலிருந்து அன்பைப் பருகி நாமும் மற்றவர்களிடம் அன்பைப் பகிர்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

2009-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் நிகழ்ந்தச் சம்பவம் அன்னையின் பரிந்துரைக்குச் சான்றாகும். அட்லாண்டிக் கடலில் பறந்தபோது இயந்திரப் பழுதால் விமானம் தாறுமாறாகப் பறந்துப் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியது. அப்போது விமானிகளில் ஒருவரான கத்தோலிக்கர், பயணிகளிடம் "அருள்நிறைந்த மரியே" செபத்தை உருக்கமாகச் செபித்தார். செபம் முடிந்ததும் விமானம் பாதுகாப்பாக ஆற்றில் இறங்கி, 200 பயணிகளும் எவ்விதச் சேதமுமின்றி உயிர் தப்பினர். ஒரே ஒரு அருள்நிறை செபம் எத்தகையப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தும் என்பதற்கு இது ஒரு சாட்சியாகும்.நாம் வேலைகளால் ஓய்வின்றி உழைப்பவர்களாக இருந்தாலும், செபிப்பதற்குச் சில நொடிகளை ஒதுக்க முன்வர வேண்டும். பயணங்களின் போதும்  வேலைகளுக்கு இடையிலும் மரியன்னையை நோக்கிச் செபிப்பது நமக்கு வலிமையை அளிக்கும். அன்னையின் மீது கொள்ளும் பற்று மனிதருக்கு எத்தகைய மனவலிமையைத் தருகிறது என்பதை ஆக்ஸ்போர்டு ஆய்வு விளக்குகிறது. ஆய்வுக்காகப் பத்து கத்தோலிக்கர்களும் பத்து நாத்திகர்களும் தனித்தனி அறைகளில் மின்அதிர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மரியாவின் திருச்சொரூபம் இருந்த அறையில் கத்தோலிக்கர்கள் எவ்விதப் பாதிப்பும் இன்றி மிகவும் அமைதியாக இருந்தனர்.

நிறைவாக, அன்பின் ஊற்றாகத் திகழும் அன்னை மரியா நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் துணையிருக்கிறார். அவரது பரிந்துரையால் நாம் பெறும் நன்மைகளை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறுவோம். இந்தத் தொடரின் மூன்றாவதுப் பகுதி நமது உள்ளங்களில் அன்பையும் நம்பிக்கையையும் விதைத்திருக்கும். அன்னையைப் போல நாமும் பிறருக்குப் பணிவிடைச் செய்யும் உள்ளத்தைப் பெறுவோமாக. இறைவனின் பேரன்பும் அன்னையின் அரவணைப்பும் நம்மை என்றும் வழிநடத்தட்டும். நன்றி. அன்பார்ந்தவர்களே, அன்னை மரியா எவ்வாறு அன்பின் ஊற்றாகத் திகழ்ந்து, கானாவூர் திருமணத்தின் குறையைத் தீர்த்து, கல்வாரியில் உலகிற்குத் தாயாக மாறினார் என்பதை இன்று நாம் சிந்தித்தோம். அவரது பரிந்துரைக்கும் பண்பும், தன்னலமற்ற தாயன்பும் நமது வாழ்விற்குப் பெரிய படிப்பினைகளாக உள்ளன. தனது மகனிடம் நமக்காக ஓயாதுப் பரிந்துரைக்கும் அந்த அன்னையின் பாதம் பணிவோம். அடுத்த வார அத்தியாயத்தில், அன்னை மரியாவின் வாழ்வின் மேலும் பல புனிதமான செய்திகளைக் காண்போம். அன்னையின் அருள் உங்களோடு இருப்பதாக! நன்றி.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2026, 14:21