கர்தினால் தாக்லே கர்தினால் தாக்லே  

கிறிஸ்துவில் ஒன்றித்திருப்பதே கிறிஸ்தவ மறைப்பணியின் தொடக்கம்!

கிறிஸ்து விரும்பும் ஒற்றுமை என்பது வெறும் நிர்வாக ரீதியிலானதோ அல்லது திட்டமிட்ட ஒன்றோ மட்டுமல்ல, அது திருமுழுக்கின் மூலம் வேரூன்றிய ஒரு இறைத்தன்மை கொண்ட ஒன்றிப்பு.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருமுழுக்கின் வழியாக, கிறிஸ்தவர்கள் மூவொரு இறைவனோடும், தங்களுக்குள் ஒருவரோடு ஒருவரும் இணைக்கப்பட்டுள்ளனர் என்று எடுத்துக்காட்டிய கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், இந்த ஒற்றுமை ஒரு கொடையாகவும், மறைப்பணியின் அடிப்படையாகவும் அமைகிறது என்றும், உண்மையான கிறிஸ்தவ ஒற்றுமை என்பது மறைப்பணியின் நம்பகத்தன்மைக்கு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் விடுத்த "கிறிஸ்துவில் ஒன்றித்து, பணியில் இணைந்திருப்போம்" என்ற 2026 ஆம் ஆண்டிற்கான உலக மறைபரப்பு ஞாயிறுக்கான கருப்பொருள் பற்றி உரோமில் இடம்பெற்ற பாப்பிறை மறைப்பணியாளர் சமூகங்களின் பொது அவையின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது இவ்வாறு கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்ட இந்தச் செய்தி, கிறிஸ்தவ ஒற்றுமையே மறைப்பணியின் அடிப்படை என்று வலியுறுத்துவதாக தெரிவித்த கர்தினால் தாக்லே அவர்கள், பிரிவினையும், அநீதியும், போரும் நிறைந்த இந்த உலகில், ஒன்றிப்பு, அமைதி மற்றும் உடனிருத்தல் சாத்தியம் என்பதை திருஅவையின் சான்று வாழ்வு உலகுக்குக் காட்ட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

யோவான் நற்செய்தியிலுள்ள இயேசுவின் இறைவேண்டுதலை மேற்கோள்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், கிறிஸ்து விரும்பும் ஒற்றுமை என்பது வெறும் நிர்வாக ரீதியிலானதோ அல்லது திட்டமிட்ட ஒன்றோ மட்டுமல்ல, அது திருமுழுக்கின் மூலம் வேரூன்றிய ஒரு இறைத்தன்மை கொண்ட ஒன்றிப்பு என்று விளக்கினார்.

மேலும் திருத்தூதர் பணிகள் நூலிலுள்ள தொடக்க கிறிஸ்தவ சமூகங்களைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், அவர்களின் கூட்டுப் இறைவேண்டல், சகோதரத்துவம் மற்றும் ஒருவருக்கொருவர் காட்டிய அக்கறை இன்றைய திருஅவைக்கு ஒரு முன்மாதிரி என்று விவரித்ததுடன், அன்பே மறைப்பணியின் இதயம் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

லெபனோனில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றிற்குச் சென்ற அனுபவத்தை எடுத் துக் காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், கிறிஸ்தவ அன்பின் செயல்களைக் கண்ட இளம் அகதி சிறுமி ஒருவர், "நான் இந்த இயேசுவைச் சந்திக்க விரும்புகிறேன். அவர் கட்டாயம் ஒரு நல்ல நண்பராகத்தான் இருக்க வேண்டும்" என்று கூறியதை பகிர்ந்துகொண்டார்.

 

பீதேஸ் செய்தி நிறுவனம் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மே 2026, 10:42