உக்ரைன் காரித்தாஸ் அமைப்பு, கீவ் நகரம் உக்ரைன் காரித்தாஸ் அமைப்பு, கீவ் நகரம் 

போரின் பிடியில் உக்ரைனியர்கள்: எல்லையில் கரம் கொடுக்கும் காரிதாஸ் அமைப்பு

உக்ரைனின் காரிதாஸ் அமைப்பின் கூற்றுப்படி, இரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து தப்பி ஓடும் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள், இரஷ்யா மற்றும் பெலாரஸ் வழியாகக் கடுமையான பயணத்தை மேற்கொண்டு, வோலினில் உள்ள மோக்ரானி-டோமனோவ் எல்லையைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

இரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து தப்பி ஓடும் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள், இரஷ்யா மற்றும் பெலாரஸ் வழியாக நீண்ட மற்றும் சோர்வான பயணத்தை மேற்கொண்டு, வோலினில் உள்ள மோக்ரானி-டோமனோவ் எல்லையைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த வழித்தடமே தற்போது உக்ரைனுக்குள் நுழைவதற்காக செயல்பாட்டில் இருக்கும் ஒரே மனிதாபிமான வழித்தடமாக உள்ளது என்று உக்ரைனின் காரிதாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

"பலர் மன உளைச்சலுடனும், மிகுந்த சோர்வுடனும், ஆவணங்கள் அல்லது உயிர் பிழைத்திருப்பதற்கான எந்த வளங்களும் இன்றி அங்கு வருகின்றனர்" என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி, 2025 முதல், எல்லையைக் கடப்பவர்களுக்கு உதவி வரும் உக்ரைனில் உள்ள கரிதாஸ் அமைப்பு, போக்குவரத்து, உணவு, தங்குமிடம், சட்ட உதவி, நிதி ஆதரவு மற்றும் உளவியல் ரீதியான கவனிப்பை அவர்களுக்கு வழங்குகிறது; குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நடக்க இயலாதவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைனின் காரிதாஸ் துணைத் தலைவர் ஹிரிஹோரி செலெஷ்சுக் அவர்கள், பல அகதிகள் கடினமான சூழ்நிலையில் பல நாட்கள் பயணம் செய்வதாகவும், மீண்டும் மீண்டும் சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு ஆழ்ந்த பயத்துடன் இங்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் "தொலைந்து போன ஆவணங்களை மீட்டெடுக்கவும், தற்காலிக தங்குமிடத்தை ஏற்பாடு செய்யவும் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவவும் காரிதாஸ் பணியாளர்கள் தொடர்ந்து இம்மக்களுக்கு உதவி வருகிறார்கள்" என்றும் ஹிரிஹோரி செலெஷ்சுக் அவர்கள் கூறியுள்ளார்.

"உதவி பெற்றவர்களில் தனது இரண்டு குழந்தைகளுடன் தப்பி வந்த ஒரு கைம்பெண்ணும் ஒருவர்" என்றும் "அவர் தனது அனைத்து ஆவணங்களையும் இழந்திருந்தார்" என்றும் "அவருக்குத் தங்குமிடம் உருவாக்கவும், தனது அடையாள ஆவணங்களை மீட்டெடுக்கும் செயல்முறையைத் தொடங்கவும் காரிதாஸ் உதவியது" என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.

குறைதீர்க்கும் அலுவலகம், ஐநா முகமைகள் மற்றும் மனிதாபிமான உதவியாளர்களுடன் இணைந்து, உக்கரைனில் கடந்த ஒரு ஆண்டில் 2,500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு காரிதாஸ் ஆதரவளித்துள்ளது. இதில் ஏறத்தாழ 400 சிறார்களும் அடங்குவர். பல குழந்தைகள் உக்ரைனில் தங்களது வாழ்க்கையையும் கல்வியையும்  மீண்டும் பாதுகாப்பாக தொடங்க காரிதாஸ் அமைப்பு தொடர்ந்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2026, 14:58