திருத்தந்தை  அவர்களின் ‘Magnifica humanitas’ திருத்தூது மடல் திருத்தந்தை அவர்களின் ‘Magnifica humanitas’ திருத்தூது மடல்   (AFP or licensors)

செயற்கை நுண்ணறிவும் மனித மாண்பும்: சிலிக்கான் பள்ளத்தாக்குடன் வத்திக்கானின் பத்தாண்டு கால உரையாடல்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மேக்னிஃபிகா ஹுமானிட்டாஸ்' (மகத்தான மனித மாண்பு) என்ற திருத்தூது மடலைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து சிலிக்கான் பள்ளத்தாக்குடன் வத்திக்கான் கடந்த பத்தாண்டுகளாக நடத்தி வரும் உரையாடல்கள் பற்றிய விவரங்களை அருள்பணியாளர் ப்ரெண்டன் மெக்குயர் பகிர்ந்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் செயற்கை நுண்ணறிவு காலத்தில் மனித மாண்பை பாதுகாப்பது குறித்த முதல் திருத்தூது மடலான 'மேக்னிஃபிகா ஹுமானிட்டாஸ்' அதாவது 'மகத்தான மனித மாண்பு' என்னும் திருமடல் வெளியானதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கு உலகத்துடன் வத்திக்கான் கடந்த பத்தாண்டுகளாக நடத்தி வரும் உரையாடல் குறித்து அருள்பணியாளர் ப்ரெண்டன் மெக்குயர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அயர்லாந்தில் பிறந்தவரான அருள்பணியாளர் மெக்குயர், கணினி அறிவியல் மற்றும் சைபர் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் பொறியாளர் ஆவார். இவர் சிலிக்கான் பள்ளத்தாக்கின் மையப்பகுதியான கலிபோர்னியாவின் லாஸ் ஆல்டோஸில் உள்ள புனித சைமன் பங்கில் பணியாற்றி வருகிறார்.  திருத்தூது மடலை தயாரிக்கும் நிகழ்வில் பங்கேற்ற ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிறிஸ் ஓலா உள்ளிட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் பல ஆண்டுகளாக அவர் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி மற்றும் அதன் சமூக தாக்கம் குறித்து பல தொழில்நுட்ப வல்லுநர்கள் தன்னிடம் கவலை தெரிவித்துள்ளதாக அருள்பணியாளர் மெக்குயர் அவர்கள் கூறியுள்ளார். ஆயர் பால் டை மற்றும் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறையுடன் இணைந்து, தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறியும் அமர்வுகளையும் கூட்டு முயற்சிகளையும் ஏற்பாடு செய்தனர்.

இத்தகைய அமர்வுகள் இறுதியில் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம், அறநெறி மற்றும் கலாச்சாரத்திற்கான ஒரு நிறுவனத்தை நிறுவ உதவியது.

தொழில்நுட்ப நிறுவனங்களுடனான திருஅவையின் உரையாடலை "ஞானத்தைத் தேடும் முயற்சி" என்று விவரித்துள்ள அருள்பணியாளர் மெக்குயர் அவர்கள்,  விமர்சன ரீதியாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபடுவதை விட, அமைதியாக இருப்பது மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு, சமூகம் மற்றும் மனித மாண்பு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் விளைவுகள் குறித்த அச்சங்களை ஏற்றுக்கொண்டாலும், தொழில்நுட்பம் மனிதகுலத்தின் எதிர்காலத்தை வடிவமைத்து வருவதால் அது பற்றிய உரையாடல் இன்றியமையாதது என்றும் அருள்பணியாளர் மெக்குயர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருஅவைத் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படவும், கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் "ஞான வட்டங்களை" (wisdom circles) உருவாக்குவதே அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2026, 14:54