அருள்பணியாளர் கோஸ்டா அருள்பணியாளர் கோஸ்டா 

பண்பாட்டு மயமாக்கலில் புதிய தடம் பதிக்கும் மங்கோலியத் திருஅவை!

மங்கோலியத் திருஅவை ஒன்றிணைந்த பயணம் மற்றும் பண்பாட்டு மயமாக்கலின் ஒரு "ஆய்வுக்கூடம்" : அருள்பணியாளர் கோஸ்டா

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மங்கோலியாவின் மிகச்சிறிய கத்தோலிக்க சமூகம், ஏறத்தாழ 1,400 நம்பிக்கையாளர்களை மட்டுமே கொண்டதாக இருந்தாலும், அது ஒன்றிணைந்த பயணம் (synodality) மற்றும் பண்பாட்டு மயமாக்கல் (inculturation) ஆகியவற்றின் ஒரு ஆய்வுக்கூடமாக மாறிவருகிறது என்று பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலான்பாத்தார் அப்போஸ்தலிக்க மறைமாவட்டத்தின் அண்மைய மேய்ப்புப்பணி வாரத்தின்போது, இயேசு சபையின் இறையியல் அறிஞர் அருள்பணியாளர் ஜியாகோமோ கோஸ்டா அவர்கள், இந்த இளம் திருஅவை மங்கோலியாவின் தனித்துவமான கலாச்சார சூழலில் நற்செய்தியை எவ்வாறு அறிவிக்கக் கற்றுக்கொள்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

கர்தினால் ஜார்ஜியோ மாரெங்கோ அவர்களின் வழிகாட்டுதலில், மங்கோலிய மொழி மற்றும் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக "ஸ்டுடியம்" என்ற புதிய மையம் திறக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த மையம் ஆழமான கலாச்சார புரிதலை நோக்கமாகக் கொண்ட ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு மற்றும் மறைப்பணியாளர் உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும்.

மங்கோலியாவில் கிறிஸ்தவத்திற்கு வரலாற்று அல்லது கலாச்சார வேர்கள் இல்லை என்பதை விவரித்த அருள்பணியாளர் கோஸ்டா அவர்கள், இதனால் நற்செய்தி அறிவிப்பு என்பது நிறுவப்பட்ட பாரம்பரியங்களைச் சார்ந்திருக்காமல், நம்பிக்கை, உறவுகள் மற்றும் சாட்சியங்களை உருவாக்கும் ஒரு செயல்முறையாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஒன்றிணைந்த பயணம் என்பது ஒரு திருஅவை, வெளிநாட்டு திருஅவை மாதிரிகளைப் பிரதி எடுப்பதைத் தவிர்க்க உதவுவதோடு, உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய பகிரப்பட்ட புரிதலை ஊக்குவிக்கிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மங்கோலிய திருஅவையின் அனுபவம் உலகளாவிய திருஅவைக்கு ஒரு முக்கியமான பாடத்தை வழங்குகிறது என்று கூறிய அருள்பணியாளர் கோஸ்டா அவர்கள், ஒன்றிணைந்த பயணம்  என்பது கட்டமைப்புகள் அல்லது ஆலோசனைகளைப் பற்றியது மட்டுமல்ல, அது பன்முக கலாச்சார மற்றும் மறைப்பணி சூழலில் வாழும் ஒன்றிப்பு, பணி மற்றும் உண்மையான உறவுகளைப் பற்றியது என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மே 2026, 12:29