எளிமையின் சாட்சியம்: மங்கோலியத் திருஅவைக்கு இன்றும் வழிகாட்டும் அருள்பணி. ஸ்தேபான் கிம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
அருள்பணி. ஸ்தேபான் கிம் சியோங்ஹுவான் (Father Stefano Kim SeongHueon) அவர்கள் இறைபதம் அடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், அவரது எளிய வாழ்வும் அர்ப்பணிப்புமிக்க மறைப்பணி வாழ்வின் சாட்சியமும் மங்கோலியத் திருஅவைக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.
உலான்பாத்தார் திருத்தூதுப் பகுதி மறைமாவட்டத்தின் (Apostolic Prefecture) முதன்மை அருள் பணியாளராகவும் (Vicar General), கொரிய நாட்டு மறைப்பணியாளராகவும் விளங்கிய அருள்பணி. கிம் அவர்கள், தனது சிறுவயது முதலே மனதைத் தொட்ட, “மறைப்பணியாளர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?” என்ற வினாவிற்கு விடை காண்பதற்கே தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தார். தென்கொரியாவில் பிரெஞ்சு மறைப்பணியாளர்களால் நிறுவப்பட்ட ஒரு பங்கில் வளர்ந்த இவர், ஒரு மறைமாவட்ட அருள்பணியாளராகவும் அதே வேளையில் ஒரு தியாக உணர்வுமிக்க மறைப்பணியாளராகவும் வாழ்வதற்கு இறைவனால் அழைக்கப்பட்டார்.
உரோம் நகரில் மறைத்தூதுப் பணியியல் (Missiology) பயின்ற பிறகு அவரது இறைய ழைத்தல் மேலும் ஆழமடைந்தது. பின்னர் மங்கோலியாவிற்குச் சென்ற அவர், அங்குள்ள கான்-ஊல் (Khan-Uul) மாவட்டத்தில் ‘விண்ணேற்பு அன்னை’ (Santa Maria Assunta) ஆலயப் பங்கை நிறுவினார். ஒரு அருள்பணியாளரின் முதன்மைப் பணி என்பது, “அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கும் துயரப்படுபவர்களுக்கும் ஆலயக் கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருப்பதே” என்று அவர் ஆழமாக நம்பினார்.
தந்தை கிம் அவர்கள் மங்கோலிய மக்களின் எளிய வாழ்வுமுறையைத் தன் சொந்த வாழ்வாகவே ஏற்றுக்கொண்டார். அதன் அடையாளமாக, கிராமப்புறங்களில் உள்ள மங்கோலியர்களின் பாரம்பரியக் கூடாரமான ‘கெர்’ (Ger) என்ற இல்லத்தில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் தங்கி வாழ்ந்தார். வறுமையை அவர் ஒரு குறையாகவோ அல்லது தடையாகவோ பார்க்கவில்லை; மாறாக, மனிதர்களை இறைவனுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் ஒரு உன்னதமான "ஆன்மீகச் செல்வம்" (Spiritual Richness) என்றே அவர் கருதினார்.
குறிப்பாக இளையோர் மீது அவர் காட்டிய அளவற்ற அன்பிற்காகவும் நெருக்கத்திற்காகவும் தந்தை கிம் இன்றும் நினைவு கூரப்படுகிறார். அவரது வாழ்வை விவரிக்கும் ஆவணப்படங்கள் வழியாகவும், ஆண்டுதோறும் அவரது கல்லறையில் நடைபெறும் நினைவு அஞ்சலி வழிபாடுகள் வழியாகவும் அவருடைய ஆன்மீக மரபு இன்றும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. அவர் விட்டுச் சென்ற, “நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” என்ற ஆழமான கேள்வி, இன்றும் ஒவ்வொரு மறைப்பணியாளரின் இதயத்திலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
பீதேஸ் செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்