2026.05.18 Jubilee

தெரெசின் முன்னாள் நாஜி வதை முகாமில் 'நல்லிணக்கத்தின் யூபிலி' கொண்டாட்டம்!

மனிதத் துயரங்களை வெறும் புள்ளிவிவரங்களாகப் பார்க்கக்கூடாது.ஒவ்வொரு மனிதனின் உயிரிழப்பும் உலகையே இழப்பதற்குச் சமம்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மன்னிப்பதில் எந்த விதிவிலக்குகளையும் நாம் தேடக்கூடாது என்றும், எவ்வளவு கடினமாக இருந்தாலும் நல்லிணக்கமே முதன்மையானது என்றும் பேராயர் ஸ்டானிஸ்லாவ் பிரைபில் அவர்கள் வலியுறுத்தினார்.

மே 9, சனிக்கிழமையன்று, 2026-ஆம் ஆண்டின் 'நல்லிணக்கத்தின் யூபிலி' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, செக் குடியரசின் தெரெசின் முன்னாள் நாஜி வதை முகாமில் இடம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் கூட்டத்தில் உரையாற்றியபோது,  இவ்வாறு ப்ராக் (Praha) பெருநகர பேராயர் பிரைபில் அவர்கள் கூறினார். 

மனிதத் துயரங்களை வெறும் புள்ளிவிவரங்களாகப் பார்க்கக்கூடாது  என்று கூறிய பேராயர் பிரைபில் அவர்கள், ஒவ்வொரு மனிதனின் உயிரிழப்பும் உலகையே இழப்பதற்குச் சமம் என்றும்  குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு, இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட வடுக்களைக் குணப்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டிற்காகத் தொடங்கப்பட்ட நல்லிணக்கத்தின் யூபிலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த யூபிலி கொண்டாட்டத்திற்காக போர்க்கால கொடுமைகள் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய இடங்களில் மாதாந்திர இறை வேண்டல்கள், திருப்பலிகள் மற்றும் புனிதப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளின் பிரதிநிதிகள் நாடுகளுக்கு இடையே அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக இணைந்து இறைவேண்டல் செய்தனர்.

1941 இல் ஒரு நாஜி வதை முகமாக நிறுவப்பட்ட தெரெசினில், ஏறத்தாழ 35,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏறத்தாழ 1,40,000 யூதர்கள் இந்த முகாமில் இருந்து பிற முகாம்களுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

போருக்குப் பிறகு, இந்த இடம் ஜெர்மானியர்களுக்கான ஒரு தடுப்புக் காவல் முகாமாகவும் செயல்பட்டது, அங்கு 500 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். அடுத்த யூபிலி புனிதப் பயணம் ஜூன் 3 அன்று போஸ்டோலோபிர்டியிலிருந்து ஜாடெக் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மே 2026, 14:11