Pierbattista Pizzaballa தலைமையில் எபிரேய மொழி பேசும் கத்தோலிக்கர்களின் மறைப்பணியின் 70ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்ட போது Pierbattista Pizzaballa தலைமையில் எபிரேய மொழி பேசும் கத்தோலிக்கர்களின் மறைப்பணியின் 70ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்ட போது 

எபிரேய கத்தோலிக்கர்களின் 70-வது ஆண்டு விழா

புனித யாக்கோபு மறைவட்டம் பல இஸ்ரேலிய நகரங்களில் யூத மற்றும் யூதரல்லாத கத்தோலிக்கர்கள், புலம்பெயர்ந்தோர், உள்ளூர் கிறிஸ்தவர்கள் மற்றும் ரஷ்ய மொழி பேசும் நம்பிக்கையாளர்களுக்குப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மே 02, சனிக்கிழமையன்று, எருசலேமின் இலத்தீன் திருஅவையின்கீழ் இயங்கும் புனித யாக்கோபு மறைவட்டம் தனது 70-வது ஆண்டு விழாவை நோட்ரே டேம் மையத்தில் கொண்டாடியது. இதில் ஏறத்தாழ 350 பங்கு மக்களும் விருந்தினர்களும் கலந்து கொண்டனர். திருத்தூதரான புனித யாக்கோபுவின் திருவிழா திருப்பலியை எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa தலைமை ஏற்று நடத்தினார்.

இந்த மறைவட்டம் இஸ்ரேலில் உள்ள கத்தோலிக்க திருஅவையின் ஒரு தனித்துவமான இருப்பைப் பிரதிபலிக்கிறது. இது அகில உலகத் திருஅவையுடன் முழுமையாக ஒன்றிணைந்து செயல்படும் அதே வேளையில், எபிரேய மொழி பேசும் கத்தோலிக்கர்களுக்குப் பணியாற்றி வருகிறது.

கடந்த எழுபது ஆண்டுகளாக இந்தச் சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவிய அருள்பணியாளர்கள், அர்ப்பணிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொதுநிலை இறைமக்களுக்கு இந்தக் கொண்டாட்டத்தின் போது நன்றி தெரிவிக்கப்பட்டது.  சிறப்புத் திருப்பலியைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், இசை நிகழ்ச்சிகள், இறைச் சாட்சியங்கள் மற்றும் கிறிஸ்தவ ஊடக மையம் தயாரித்த ஆவணப்படத்தின் திரையிடல் எனப் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இங்கு 2005 முதல் 2008 வரை மறைவட்ட அதிபராக பணியாற்றிய கர்தினால் Pizzaballa அவர்கள், இஸ்ரேல் மக்களைப் புரிந்து கொள்வதன் அவசியத்தையும், திருஅவை அதன் எதிர்காலத்தை நோக்கிச் செல்ல உதவுவதையும் வலியுறுத்தினார்.

மேலும் "இந்த மறைவட்டத்தின் நீடித்த வலிமை என்பது உத்தி நிறைந்த செயல்திட்டங்களால் வரவில்லை, மாறாக இயேசு கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டிருப்பதிலிருந்து மறைவட்டத்தின் வலிமை பெறப்பட்டது"  என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலில் உள்ள எபிரேயம் பேசும் கத்தோலிக்கர்களுக்கான லத்தீன் திருஅவையின் முதன்மை அருள்பணியாளரான Piotr Żelazko அவர்கள் இந்த ஆண்டு விழாவை நம்பிக்கை, உரையாடல் மற்றும் இரக்கத்தின் பாலங்களைத் தொடர்ந்து உருவாக்குவதற்கான ஒரு "கொடை" மற்றும் "பொறுப்பு" என்று விவரித்துள்ளார்.

இன்று, இந்த மறைவட்டம் பல இஸ்ரேலிய நகரங்களில் யூத மற்றும் யூதரல்லாத கத்தோலிக்கர்கள், புலம்பெயர்ந்தோர், உள்ளூர் கிறிஸ்தவர்கள் மற்றும் ரஷ்ய மொழி பேசும் நம்பிக்கையாளர்களுக்குப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மே 2026, 13:40