இன்றைய புனிதர்
புனித சிரில்
திரு. பிலோமி அலெக்ஸ்
செசரியா நாட்டில் வாழ்ந்த கிறிஸ்துவை ஏற்று திருமுழுக்கு பெற்றிருந்த தாயாருக்கும், கிறிஸ்துவத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்த தந்தைக்கும் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் மகனாக பிறந்தார் சிரில். தன் அன்னையின் வாயிலாக கிறிஸ்துவினைக் அறிந்துக் கொண்ட சிரில் திருமுழுக்குப் பெற்று இறைபக்தியோடு வாழ்ந்தார். கிறிஸ்துவினை ஏற்றுக்கொண்டதினால் தன் தந்தையினால் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்ட சிரில் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியோடிருந்ததினால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு திருமுழுக்கு பெற்ற சிரிலை செசாரியா ஆளுநர் கைது செய்து ஆண்டவர் இயேசுவை மறுதலிக்குமாறு கூற, இதனை உறுதியோடு மறுத்த சிரில், நான் மகிழ்ச்சியுடன் வீட்டைவிட்டு வந்துவிட்டேன் ஏனென்றால் எனக்கெனச் சிறந்த பரிசு ஒன்று காத்திருக்கிறது என்றார்.
உரோமை தெய்வத்தினை ஏற்க மறுப்பு தெரிவித்ததினால் ஆளுநனால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த சிரில் நான் கிறிஸ்துவை நம்புவதால் தண்டனை அனுபவிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே என்று கூறினார். சிரிலின் உறுதியினை கண்ட ஆளுநன் கோபமுற்று உன்னை கொல்வதற்கு ஒருபுறம் நெருப்பும், மறுபுறம் வாளும் தயாராக இருக்கிறது என்று கூற இறப்பினைக் கண்டு எனக்கு பயம் இல்லை ஏனென்றால் இது எனக்கு மேலான வாழ்வைத் தர இருக்கிறது என்று கூறினார். ஆண்டவரை அன்பு செய்து, இறைபக்தியோடு வாழ்ந்த சிரில் கி.பி 251 ஆம் ஆண்டு செசாரியாவின் ஆளுநனால் தலைவெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆண்டவர் இயேசுவினை மறுதலிக்க மறுத்து, கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியோடிருந்த சிரிலை திரு அவை புனிதராக உயர்த்தி போற்றியது.
இன்று, புனித சிரில் திருவிழாவினைக் கொண்டாடுகின்ற நாம் நமது வாழ்வில் பல்வேறு துன்பங்கள் வந்தாலும் மனவலிமையோடு எதிர்கொண்டு விசுவாசத்தில் நிலைத்து வாழ்வதற்காக செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்