பேராயர் பால் ரிச்சர்டு காலகர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்  

வத்திக்கான் - கேப் வெர்டே 50 ஆண்டு கால உறவின் பொன்விழாச் செய்தி

இன்றைய உலகிற்கு அமைதி மிகவும் அவசியம். அந்த அமைதி என்பது ஆயுதங்களால் உருவாவதல்ல; மாறாக, இறை நம்பிக்கையாலும் தூய ஆவியின் வழிநடத்துதலாலும் மட்டுமே சாத்தியமாகும்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

உண்மையான அன்பு என்பது இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது என்று இயேசு கற்பிக்கிறார் என்றும், கிறிஸ்துவின் வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றின் மூலம் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் அன்பு, நம்பிக்கையாளர்களை ஒற்றுமை, பிறரன்புப் பணி மற்றும் உண்மைத் தன்மையுடன் வாழுமாறு அழைப்பு விடுக்கிறது என்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள் கூறினார்.

வத்திக்கான் மற்றும் கேப் வெர்டே இடையிலான 50 ஆண்டுகால தூதரக உறவைக் கொண்டாடும் விதமாக, வத்திக்கானில் உள்ள டைபர் நதிக்கரை புனித மரியா (Santa Maria in Trastevere) பேராலயத்தில் இடம்பெற்ற ஒரு சிறப்புத் திவ்ய நற்கருணைப் பெருவிழாவில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.

இறைவன் காட்டிய அந்த அன்பிற்கு, திருஅவையானது நற்செய்தி அறிவிப்பு மற்றும் மக்கள் சேவையின் வழியாகத் தனது பங்களிப்பை வழங்குகிறது என்றும், குறிப்பாகக் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலத்திட்டங்கள் மூலம் இச்சேவைகளை முன்னெடுத்து வருகிறது என்றும் பேராயர் காலகர் அவர்கள் குறிப்பிட்டார்.

மேலும், திருஅவை ஒவ்வொரு மனிதனின் மாண்பையும், உலகப் பொருட்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவை என்பதையும் வலியுறுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், ஒவ்வொரு மனிதனும் தனது வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை உரிமைகளையும் வசதிகளையும் பெறுவதற்கு உரிமையுள்ளவர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார்.

இன்றைய மனிதகுலத்திற்கு அமைதி எவ்வளவு அவசரத் தேவை என்பதை வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள், உண்மையான அமைதி என்பது ஆயுதங்களால் வருவதல்ல; மாறாக, இறைவனின் மீது வைக்கும் நம்பிக்கை, அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் தூய ஆவியின் வழிநடத்தல் ஆகியவற்றின் மூலமே கிடைக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டினார்.

இந்தத் திவ்ய நற்கருணைப் பெருவிழாவின் வழியாக, திருஅவைக்கும் அரசுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் உறவிற்காக நன்றி செலுத்தப்பட்டது. இந்த உறவானது, சுமூகமான மரியாதை மற்றும் பொது நலனுக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப் வெர்டே நாட்டின் வளர்ச்சிக்கு திருஅவை ஆற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை, குறிப்பாக அதன் பிறரன்புப் பணிகள் மற்றும் நலிந்தோர் மீதான அக்கறை ஆகியவற்றின் வழியாக எடுத்துரைத்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மே 2026, 11:41