விவிலியத் தேடல்
திபா 147 : 12 - 15, 19 - 20
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
கிறிஸ்து இயேசுவில் அன்பிற்கினியவர்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். இந்தச் சிறு சிந்தனையின் வழியாக உங்களது நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்கவிருக்கும் திருப்பாடல் 147. இந்தத் திருப்பாடலைப் புரிந்துகொள்ள அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் முதலில் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.
இத்திருப்பாடல் ஒரு பெரும் இன்னலுக்குப் பிறகு, அதாவது இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து விடுபட்டுத் தாயகம் திரும்பியபோது பாடப்பட்டது. நீண்ட கால அடிமைத்தனம் முடிவுக்கு வந்து, அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்த அந்தத் தருணம் பெரும் மகிழ்ச்சியானது. ஒரு வேற்று அரசனிடம் அடிமைப்பட்டிருந்த காலம் முடிந்து, சுதந்திரத்தையும், உறவையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும் ஒரு சங்கமமாக இந்தத் திருப்பாடல் அமைகிறது. திருப்பாடல்கள் 145 முதல் 150 வரை உள்ள அனைத்தும் 'ஆண்டவரைப் போற்றுங்கள்' (அல்லேலூயா) என்ற ஒற்றைக் கோணத்தையே மையமாகக் கொண்டுள்ளன. இத்தனை காலம் கடவுளின் அன்பை உணராதிருந்த மக்கள், இப்போது அந்த அன்பின் மீது எத்தகைய தாகம் கொண்டுள்ளனர் என்பதை இவை விளக்குகின்றன. இத்திருப்பாடலில் மக்கள் முதலில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகிறார்கள். உம் அன்பைப் புறக்கணித்தோம், உம்மை அன்பு செய்யத் தவறிவிட்டோம் என்று அவர்கள் கதறுகிறார்கள். விவிலியத்தில் பல இடங்களில் மக்கள் மன்னிப்புக் கேட்கிறார்கள், ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது இறைவனின் 'ஏற்றுக்கொள்ளும் பண்பு'.
நம் இறைவன் நம்மைக் கண்டிப்பவர் மட்டுமல்ல, மன்னித்தவுடனே நம்மை முழுமையாக ஏற்றுக்கொள்பவர். படைத்த இறைவன் எந்நாளும் நம்மை விட்டு விலகுவதில்லை, நம்மை உதறித் தள்ளுவதுமில்லை. நாம் எப்போது நம் முகத்தை அவரிடம் திருப்புகிறோமோ, அந்த நொடியே அவர் நம்மை அரவணைத்துக் கொள்கிறார். திருப்பாடல் 147-ன் 9-வது இறைவார்த்தையில், "கால்நடைகளுக்கும் அவர் உணவளிக்கின்றார்" என்று வாசிக்கிறோம். ஒரு பறவைக்குஞ்சு கத்துவதற்கு முன்பே, அதன் தாய் அதற்கு இரை கொடுப்பது போல, நம் வார்த்தைகள் வெளிப்படும் முன்பே நம் தேவைகளை அறிந்து இறங்கி வருபவர் நம் இறைவன். அவர் ஒரு தாய் உள்ளம் கொண்டவர்.
உலகம் படைபலமுள்ள வீரனைப் புகழலாம், ஆனால் நம் இறைவன் யாரை நேசிக்கின்றார் தெரியுமா? யார் கடவுளுக்கு அஞ்சி வாழ்கின்றாரோ, அவரை இறைவன் அன்பு செய்கின்றார்.யார் இறைவார்த்தையைப் பின்பற்றித் தன் வாழ்வில் செயல்படுத்துகின்றாரோ, அவருடன் இறைவன் தங்கியிருக்கின்றார். யார் அவரிடம் முழுமையான மகிழ்ச்சி கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர் அனைத்தையும் செய்கிறார். நாம் எப்போது நம் வாழ்வையும் உள்ளத்தையும் கடவுளின் பக்கம் திருப்புகிறோமோ, அந்த நொடியே அந்தத் தெய்வீகத் தாய் நம்மை அரவணைக்கின்றார்.
செபம்
தாயுள்ளம் கொண்ட இறைவா, நாங்கள் அனைவருமே உம் பிள்ளைகள். நாங்கள் என்றும் தவறான பாதையில் பயணிக்க விடாதேயும். உம்மைப் பின்பற்றி, உமது மகிழ்வில் நிலைத்திருக்கவும், நீர் காட்டும் நேர்மையான பாதையில் நடக்கவும் எங்களுக்கு அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்