விவிலியத் தேடல் விவிலியத் தேடல்  (©Gaza)

விவிலியத் தேடல்

திருத்தொண்டர் துரை வசந்த் ராஜ்

திபா 149 : 1 - 6, 9

ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்.

கிறிஸ்து இயேசுவின் இதய உறவில் வாழும் அன்பு உள்ளங்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும். நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட பகுதி திருப்பாடல் 149 ஆகும். இத்திருப்பாடல் இறைவன்பால் கொண்ட பேரன்பை வெளிப்படுத்தி, மகிழ்வின் உச்சத்தில் மக்கள் பாடிப் போற்றிய ஒரு திருப்பாடலாகும். இத்திருப்பாடலின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, இதன் வரலாற்றுப் பின்னணியை நாம் அறிவது அவசியமாகும். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய நாட்டில் சிறைப்பட்டு இருந்த காலமே இதன் பின்னணியாகும். சிறைப்பட்டிருந்த காலத்தில் அவர்கள் தங்களின் மகிழ்ச்சி, வாழ்வின் ஒளி, அன்பு என அனைத்தையும் இழந்து தவித்தனர். ஆனால், அந்தச் சிறைக்காலம் முடிந்து அவர்கள் விடுதலை பெற்றுத் தாயகம் திரும்பியபோது, வாழ்வின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டார்கள். வாழ்வு என்றால் என்ன, மன அமைதி எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்துகொண்டார்கள். அதே வேளையில், இத்தனை காலம் தங்களுக்கு வழிகாட்டிய இறைவனை மறந்து வாழ்ந்ததற்காக அவர்கள் மனமாற்றம் அடைந்து வருந்தினார்கள். இறைவனைப் போற்றாமலும், அவரது பிரசன்னத்தை உணராமலும் இருந்த அந்த நாட்களே தங்களின் உண்மையான ஆன்மீகச் சிறைவாசம் என்பதை மக்கள் உணர்ந்துகொண்ட நொடிதான், அவர்களின் வாழ்வில் ஒளியான காலமாக மாறியது. அந்தத் தருணத்திலிருந்து அவர்கள் இறைவனை முழுமையாகப் புகழத் தொடங்கினார்கள்.

திருப்பாடல் 145 முதல் 150 வரை உள்ள அனைத்துப் பாடல்களும் இறைவனைப் போற்றிப் புகழும் பாடல்களாகவே அமைந்துள்ளன. "இறைவா போற்றி, மாமன்னா போற்றி" என்று ஆண்டவரை வாழ்த்தும் மனநிலையே மக்களின் முதன்மை நோக்கமாக மாறியது. இறைவனைப் போற்றி வாழும் வாழ்வே தங்களுக்குப் பொருத்தமான வாழ்வு என்பதை உணர்ந்து, அவர்கள் இறைவனை எவ்வாறு வழிபடுகிறார்கள் என்று பார்ப்போம்:

  1. புதியதோர் வாழ்வு : "ஆண்டவருக்குப் புதியதோர் பாடல் பாடுங்கள்" என்று கூறுவதன் மூலம், இறைவன் அவர்களுக்குப் புதியதொரு வாழ்வை உண்டாக்கியுள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதாவது, அடிமைத்தனத்தில் இருந்த பழைய வாழ்வு வேறு, இப்போது இறைவழியில் அவர்கள் வாழப்போகும் புதிய வாழ்வு வேறு என்பதை முதல் வசனமே பறைசாற்றுகிறது.
  2. இறைவனின் விருப்பம் : "ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கிறார்" என்று நாம் வாசிக்கிறோம். இத்தனை காலம் மக்கள் இழந்து நின்ற தங்களின் மாண்பையும் மேன்மையையும் கடவுள் அவர்களுக்கு மீண்டும் மீட்டுக் கொடுக்கிறார்.
  3. இறைவனின் உடனிருப்பு : "அவர்களது வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; அவர்களது கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும்" என்று வாசிக்கிறோம். இங்கு 'இருபுறமும் கூர்மையான வாள்' என்பது கடவுள் எப்போதும் தங்களோடு இருக்கிறார் என்ற 'உடனிருப்பை'க் குறிக்கிறது. கடவுளைப் போற்றும் நாம், அவரோடு என்றும் இணைந்திருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை இது உணர்த்துகிறது.

இத்திருப்பாடல் முழுவதும் வழிகாட்டிய இறைவனுக்குப் புகழ்ச்சிப் பாடலாகவே அமைகிறது. இதன் ஒவ்வொரு வசனமும் இறைவனின் புகழையே பாடுகிறது. மக்கள் தங்களின் வாழ்வு மாற்றத்தையும், அடைந்த மேன்மையையும் இப்பாடலின் வழியே வெளிப்படுத்துகிறார்கள். இதைத்தான் இறுதி வசனமும், "இத்தகைய மேன்மை ஆண்டவரின் அன்பர் அனைவருக்கும் உரித்தானது" என்று உறுதிப்படுத்துகிறது. ஆதலால், ஆண்டவர் அருளும் மேன்மையையும் அன்பையும் உணர்ந்து, அவர் காட்டும் வழியில் நாம் நடப்போம். நாம் நம்மை ஆண்டவரின் திருமுன் நிலைநிறுத்தும்போது, அவர் விரும்பும் மக்களாக, அவர் விரும்பும் உன்னத வாழ்வுக்குள் நம்மை வழிநடத்துவார்.

"அன்பு ஆண்டவரே, இந்நாள் வரை எங்களைக் கண்மணி போலக் காத்து வந்ததற்காக உமக்கு நன்றி. உமது அளவற்ற அருளால் எங்களுக்கு நல்வாழ்வு அளித்தமைக்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் என்றும் உமது பிள்ளைகளாக, உமது வழியைப் பின்பற்றி வாழ அருள் தாரும். உமது நியமங்களையும் உமது வார்த்தைகளையும் எங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து, உமக்கு உகந்த உமது விருப்பமான மக்களாக வாழ எங்களை ஆசீர்வதித்தருளும். எங்கள் மீட்பராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்!"

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மே 2026, 14:44