கருணைக்கொலை சட்டத்திற்கு பிரான்ஸ் தேசிய அவையின் ஒப்புதல்: ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த கத்தோலிக்க திருஅவை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பிரான்ஸ் தேசிய அவை, கருணைக்கொலைக்கு (Assisted Dying) சட்டபூர்வ அனுமதி வழங்கும் மசோதாவிற்கு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பிரான்ஸ் கத்தோலிக்க திருஅவை, நோயாளிகளுக்குப் பராமரிப்பு வழங்கி, இயற்கையான இறப்பு வரை அவர்களுடன் துணைநிற்கும் நாட்டின் நீண்டகால மருத்துவப் பாரம்பரியத்திலிருந்து இந்தச் சட்டம் விலகிச் செல்கிறது என்று தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக இடம்பெற்ற பொதுக் கலந்துரையாடல்களில் பங்கேற்ற பிரான்ஸ் ஆயர்கள், இந்தச் சட்டம் முதுமை, உடல்நலக் குறைபாடு, நோய் மற்றும் மனித பலவீனம் குறித்த சமூகத்தின் பார்வையை அடிப்படையாக மாற்றக்கூடும் என்று எச்சரித்தனர்.
நாந்தேர் மறைமாவட்ட ஆயர் மத்தியூ ரூஜே அவர்கள், மருத்துவர்களுக்கு மனசாட்சி அடிப்படையிலான விலக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மருந்தாளுநர்களுக்கும் கத்தோலிக்க மருத்துவ நிறுவனங்களுக்கும் அதே பாதுகாப்பு வழங்கப்படாததை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார். தங்களின் அறநெறிக் கொள்கைகளுக்கு முரணாக கருணைக்கொலையை அனுமதிக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டத்தை எதிர்ப்பதோடு மட்டும் நிற்காமல், முதியோர், நோயாளிகள், தனிமையில் வாழ்பவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுடன் கருணையுடனும் சகோதரத்துவ உணர்வுடனும் துணைநிற்க கிறிஸ்தவர்கள் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஆயர் ரூஜே அவர்கள் அழைப்பு விடுத்தார்.
இரண்டு மாதங்களில் பிரான்சுக்கு வருகை தரவுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மனித வாழ்வின் உரிமை கருவிலிருந்து இயற்கையான இறப்பு வரை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற திருஅவையின் போதனையை மீண்டும் வலியுறுத்துவார் என்றும், துன்பத்திலும் தனிமையிலும் வாழ்பவர்களுக்கு கிறிஸ்தவர்கள் அதிக அக்கறையுடன் சேவை செய்ய அழைப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.