காசாவில் பேரழிவு காசாவில் பேரழிவு  (ANSA)

காசாவில் போரின் சுவடுகள் தொடர்கின்றன: குழந்தைகளுக்கு கல்வி மூலம் நம்பிக்கை

2025 அக்டோபர் 10 முதல் போர்நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், காசாவில் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து வருவதாக எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறையின் முதன்மை அருள்பணியாளரான ஆயர் வில்லியம் ஷோமாலி தெரிவித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 10,  அன்று போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், காசாவில்  மனிதாபிமான நெருக்கடி தொடர்வதாக எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறையின் முதன்மை அருள்பணியாளரான ஆயர் வில்லியம் ஷோமாலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள ஆயர் ஷோமாலி அவர்கள், "போர் நிறுத்தத்திற்குப் பிறகும் கடந்த ஒன்பது மாதங்களாக அப்பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்வதால், அங்குள்ள நிலைமை பெரும்பாலும் மாறாமலேயே உள்ளது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து 265 குழந்தைகள் உள்பட 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3,400 பேர் காயமடைந்துள்ளனர்" என்றும் "தற்போது, காசாவின் 47% பகுதிக்குள் மட்டுமே பாலஸ்தீனியர்கள் முடக்கப்பட்டுள்ளனர்" என்றும் காசாவின் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் வீடுகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குடிநீர் மற்றும் மின்சார அமைப்புகள் உள்பட அப்பகுதியின் 80% உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்து கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து குறைவாகவே கிடைக்கும் சூழலில் காசாவிற்குள் சில மருந்துகள் கொண்டுவரப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை, மேலும் சிறிய தற்காலிக சந்தைகள் மூலமாகவே உணவுகள் விற்கப்படுகின்றன. வேலையற்ற பல குடும்பங்கள், இலத்தீன் வழிபாட்டு முறை மறைமாவட்டம் வழங்கும் நிதி உதவியின் மூலம் உணவைப் பெற்று உயிர்வாழ்கின்றனர்.

ஹமாஸில் இருந்து இன்னும் இராணுவப் படை அகற்றப்படாததால், அங்கு மறுசீரமைப்புப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல், மறுபயன்பாட்டுப் பொருட்களைத் தேடுவதிலேயே தங்கள் நாட்களைக் கழிக்கின்றனர்.

வரும் செப்டம்பரில் திருக்குடும்பப் பங்கில் உள்ள பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு, ஏறத்தாழ 1,000 குழந்தைகள் மீண்டும் கல்வி கற்கும் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையை ஆயர் ஷோமாலி அவர்கள் வெளிப்படுத்தினார்.

கல்வியானது நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் என்றும், போரின் அதிர்ச்சியிலிருந்து குழந்தைகள் படிப்படியாக மீண்டு வர வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஜூலை 2026, 13:22