ஹவாயில் கத்தோலிக்க மறைப்பணியின் 200ஆம் ஆண்டு யூபிலி தொடக்கம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஹவாய் தீவுகளுக்கு முதல் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் வந்தடைந்ததன் 200-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஹவாயில் உள்ள திருஅவை ஒரு யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ளது. இந்த கொண்டாட்டங்கள் 2026 ஜூலை 9 அன்று ஹொனொலுலுவில் உள்ள 'அமைதியின் அன்னை' பேராலயத்தில் ஆயர் கிளாரன்ஸ் ரிச்சர்ட் "லேரி" சில்வா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த விழாவின் போது ஆயர் சில்வா அவர்கள் தனது மறையுரையில், 1827-இல் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஹவாய் மக்களின் இதயங்களை நற்செய்தியைப் பெற்றுக்கொள்வதற்காக கடவுள் ஏற்கனவே தயார்படுத்தியிருந்தார் என்று கூறினார். மக்கள் மிகவும் சமயப்பற்றுள்ளவர்களாகவும், சமூக வாழ்க்கையை மதிப்பவர்களாகவும், தூய ஆவியானவரின் செயல்பாடுகளுக்குத் தங்களைத் திறந்த மனதுடன் உட்படுத்துபவர்களாகவும் இருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாண்ட்விச் தீவுகளின் முதல் திருத்தூது நிர்வாகியும், ஹவாயில் கத்தோலிக்க மறைப்பணியாளர்களின் முன்னோடிகளில் ஒருவருமான அருள்பணி அலெக்சிஸ் ஜான்-அகஸ்டின் பாசெலாட் இங்கு வந்தடைந்ததை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள இந்த யூபிலி ஆண்டு 2027 ஜூலையில் நிறைவடையும். அருள்பணி பாசெலாட் இங்கு முதல் கத்தோலிக்க திருப்பலிகளை நிறைவேற்றினார், மறைக்கல்வியை ஊக்குவித்தார், ஹவாய் மொழியில் இறைவேண்டல் புத்தகங்கள் மற்றும் மறைக்கல்வி நூல்களைத் தயாரித்தார், மேலும் உள்ளூர் திருஅவைக்கான அடித்தளத்தை அமைத்தார்.
அருள்பணி பாசெலாட் அவர்கள் ஹவாயில் நட்ட புரோசோபிஸ் மரத்தின் விதைகளை உவமையாகக் குறிப்பிட்ட ஆயர் சில்வா, அவை தீவுகள் முழுவதும் பரவியது போல கத்தோலிக்க நம்பிக்கையும் வளர்ந்ததாக எடுத்துரைத்தார்.
மேலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மக்களின் இதயங்களைத் தயார்படுத்தி, நற்செய்தியை விதைப்பவர்களாக வாழ்ந்து, தங்களின் மறைப்பணி அர்ப்பணிப்பைப் புதுப்பிக்குமாறு ஹவாய் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஹொனொலுலு மறைமாவட்டம் இன்று 66 பங்குகள் மற்றும் 23 ஆலயங்களைக் கொண்டு, மக்கள் வாழும் ஆறு தீவுகளில் உள்ள கத்தோலிக்கர்களுக்குச் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.