நெறி காட்டும் ஆளுமைகள்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
தூய பிரான்சிஸ் அசிசியார், இத்தாலியைச் சேர்ந்த ஒரு துறவியும், தன் புனித வாழ்க்கை முறையால் உலகம் போற்றும் இறைமனிதருமாவார். ஒருநாள் மதிய வேளையில், அவர் தோட்டத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். மண்ணைக் கொத்தி, அதை நிரப்பி, சமப்படுத்தி, மிகுந்த கவனத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் அங்கு வந்தார். "தந்தையே! இந்த வயதிலும் இவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களே! ஒரு கேள்வி கேட்கலாமா? கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?" என்று கேட்டார். அசிசியார் புன்னகையுடன், "தாராளமாகக் கேளுங்கள்," என்றார். உடனே நண்பர் "ஒருவேளை இன்று மாலையே நீங்கள் இறப்பது உறுதி என்று இப்போதே தெரிந்தால், உடனே என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்:
வேலையை நிறுத்தாமல் அமைதியாக,"அதற்குள் இந்தத் தோட்டப் பகுதியைக் கொத்தி, நிரப்பி, சமப்படுத்தி, நான் தொடங்கிய வேலையை முழுமையாக முடித்திருப்பேன்." என்று பதிலளித்தார் அசிசியார்:
இந்தப் பதில் ஒரு பெரிய வாழ்க்கைப் பாடத்தை நமக்குக் கற்றுத்தருகிறது.
சாகும் வரை கடமையை உணர்ந்து உழைப்பவருக்கு தோல்வி நிரந்தரமல்ல. வியர்வை சிந்தும் இடங்களில் வெற்றி மலர்கிறது. உண்மையான உழைப்பு ஒருபோதும் வீணாகாது. உழைப்பின் மகிமை, அதன் பலன் கிடைக்கும் தருணத்தில் மட்டுமல்ல; அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒவ்வொரு நொடியிலும் வெளிப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.