நேர்காணல் நேர்காணல்  

நேர்காணல்

"நான் நற்செய்தி அறிவிக்கும் சீடன்" என்ற அடையாளத்துடன் ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாழ அழைப்பு. 2033-ஐ நோக்கி, குழந்தைகளை நற்செய்தி அறிவிக்கும் சீடர்களாக உருவாக்கும் புதிய திருத்தூது பயணம்.

சகோதரி பிரைடா:

என் இனிய இதயங்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கம்.

நான் உங்கள் அருள்சகோதரி பிரைடா. கடந்த நிகழ்ச்சிகளில், திருத்தூது பணியாற்றும் பாலர் சபை குறித்து பல்வேறு கருத்துகளை அருட்தந்தை இருதயராஜ் அவர்களிடம் இருந்து அறிந்து கொண்டோம். இன்றும் அந்தத் தொடர்ச்சியாக மேலும் பல சிந்தனைகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள அருட்தந்தை அவர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவரை அன்புடன் வரவேற்கிறோம்.

வணக்கம், ஃபாதர்.

கடந்த அமர்வில், நமது மனதைத் தொட்டு, சிந்திக்கத் தூண்டும் பல கருத்துகளை மிக அழகாகப் பகிர்ந்து கொண்டீர்கள். அது எங்கள் உள்ளங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நீங்கள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறீர்கள். குறிப்பாக, திருத்தூது பணியாற்றும் பாலர் சபைக்காக தமிழகத் திருஅவையில் நீங்கள் வகுத்துள்ள திட்டங்கள் என்ன? இந்த இயக்கத்தின் மூலம் நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?

அருட்தந்தை இருதயராஜ்:

ஒரு நல்ல திட்டத்தை உருவாக்குவது மட்டும் போதாது; அதை செயல்படுத்தும் தைரியமும், உறுதியான செயல் திட்டமும் அவசியம். எனது விருப்பம் என்னவென்றால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் திருத்தூது பணியின் நினைவூட்டல் இருக்க வேண்டும். அதற்காகவே IMD – I am Missionary Disciple (நான் நற்செய்தி அறிவிக்கும் சீடன்) என்ற அடையாளத்தை முன்னிறுத்தி வருகிறோம். இது ஒரு பெயர் மட்டுமல்ல; ஒவ்வொரு கிறிஸ்தவரின் அடையாளமாக இருக்க வேண்டும். நாம் ஆலயத்திற்கு வந்து காணிக்கை செலுத்தி, பக்தராக மட்டும் இருப்பது போதாது. ஆண்டவர் நம்மை சீடர்களாக அழைக்கிறார். நற்செய்தியை அறிவிக்கும் சீடர்களாக வாழ வேண்டும்.

2033-ஆம் ஆண்டை முன்னிட்டு, தமிழகத்தில் மட்டுமல்ல, இலங்கை, மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட தமிழ் பேசும் நாடுகளிலும் இந்த விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. அதற்காக, எல்லா பங்குகளிலும் திருத்தூது பணியாற்றும் பாலர் சபையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். முன்பு இருந்தது போல, குழந்தைகள் ஒழுங்காக ஒன்றுகூடி, பயிற்சி பெற்று, நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இந்த இயக்கம் பங்குகளில் மட்டுமல்ல; கத்தோலிக்க கல்வி நிறுவனங்களிலும் செயல்பட வேண்டும். இதற்காக குருக்கள், துறவியர்கள், அருள்சகோதரிகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகளோடு பயணித்து, அவர்களை நற்செய்தி அறிவிக்கும் சீடர்களாக உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் குருக்கள், துறவியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நல்ல ஒத்துழைப்பு இருப்பதால், இந்த இலக்கை நிச்சயமாக அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒவ்வொரு துறவியரும், குருவும், கிறிஸ்தவரும் நற்செய்தி அறிவிப்பது தங்களின் பொறுப்பு என்பதை உணர வேண்டும். இது ஒரு கடமை மட்டுமல்ல; ஆண்டவரை அனுபவித்தவர்களின் வாழ்க்கைச் சாட்சி. 2033-ஆம் ஆண்டை நோக்கிய இந்தப் பயணம், இறைவனின் அருளால் கனிதரும் பயணமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சகோதரி பிரைடா:

அருமையான சிந்தனைகளையும் எதிர்கால செயல் திட்டங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. அன்பார்ந்தவர்களே, திருத்தூது பணியாற்றும் பாலர் சபை குறித்து பல முக்கியமான கருத்துகளை இன்று அறிந்து கொண்டோம். குறிப்பாக, இந்த இயக்கத்தை திருஅவையோடு இணைந்து எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பதையும் அருட்தந்தை அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார்.அருட்தந்தை அவர்களுக்கு மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூலை 2026, 14:19