புனித கரோலஸ் தியான மையம் புனித கரோலஸ் தியான மையம் 

தான்சானியாவில் ஆன்மிகப் புதுப்பிப்புக்கான இல்லமாக விளங்கும் புனித கரோலஸ் தியான மையம்

பிரான்சில் தோன்றிய புனித சார்ல்ஸ் பொரோமேயோ (ட்ரியர்) பிறரன்பு சபை சகோதரிகள் சபை, 1985ஆம் ஆண்டு முதல் தான்சானியாவில் கல்வி, மறைக்கல்வி மற்றும் மறைபணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு அருஷா மறைமாவட்டத்தின் தெங்கெருவில் தொடங்கப்பட்ட புனித கரோலஸ் தியான மையம், செபம், தியானம் மற்றும் ஆன்மிகப் புதுப்பிப்புக்கான அமைதியான சூழலை வழங்குகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

1652ஆம் ஆண்டு பிரான்சின் நான்சி நகரில் தொடங்கப்பட்ட புனித சார்ல்ஸ் பொரோமேயோ (ட்ரியர்) பிறரன்புச் சபை சகோதரிகள் சபை, “நிலைத்த அன்பில் இறைவனோடு ஒன்றிப்பு” என்ற தன் ஆன்மீகக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, இறைமக்களுக்குச் சேவை செய்து வருகிறது. 1985ஆம் ஆண்டு முதல் தான்சானியாவில் பணியாற்றி வரும் இச்சகோதரிகள், கல்வி, மறைக்கல்வி மற்றும் மறைபணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்மிக அமைதியையும் புதுப்பிப்பையும் நாடுவோரின் தேவையை உணர்ந்த சகோதரிகள், தான்சானியாவின் அருஷா மறைமாவட்டம், தெங்கெரு பகுதியில் புனித கரோலஸ் தியான மையத்தை நிறுவினர். 2017 அக்டோபர் 14ஆம் நாள் திறந்து வைக்கப்பட்ட இம்மையம், “நீங்கள் தனியே அமைதியான இடத்திற்குச் சென்று சிறிது ஓய்வெடுங்கள்” (மாற்கு 6:31) என்ற இயேசுவின் அழைப்பை மையமாகக் கொண்டு, செபம், தியானம், மற்றும் ஓய்வுக்கான அமைதியான சூழலை வழங்குகிறது.

விருந்தோம்பலைத் தங்களின் பணியின் மையமாகக் கொண்டுள்ள சகோதரிகள், தான்சானியாவிலிருந்தும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வரும் அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினரை அன்புடன் வரவேற்கின்றனர். கருத்தரங்குகள், மாநாடுகள், திருமணங்கள், உறுதிபூசுதல் மற்றும் குருத்துவ அருள்பொழிவு போன்ற நிகழ்வுகளுக்கான பல்நோக்கு அரங்கும் இம்மையத்தில் அமைந்துள்ளது.

தன்னிறைவை ஊக்குவிக்கும் வகையில், காய்கறித் தோட்டங்கள், பழத்தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பை மேற்கொண்டு, விருந்தினர்களுக்கு சத்தான மற்றும் தரமான உணவை வழங்குகின்றனர். மேலும், மறைக்கல்வி மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் மூலம் உள்ளூர் மக்களின் முன்னேற்றத்திற்கும் பங்களித்து வருகின்றனர்.

சில சவால்கள் இருந்தபோதிலும், புனித கரோலஸ்  தியான மையம், அன்பான விருந்தோம்பல் மற்றும் பல மொழிகளில் சேவை செய்யும் சகோதரிகளின் அர்ப்பணிப்பால், அமைதி, செபம் மற்றும் ஆன்மிகப் புதுப்பிப்பை நாடுவோருக்கு “வீட்டைப் போன்ற இன்னொரு வீடு” என்ற நற்பெயருடன் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

14 ஜூலை 2026, 12:28